பிறப்பு சாதக கட்டத்தை பார்த்தால், அதில் "ல" என்ற எழுத்து குறிக்கப்பட்டு இருக்கும். "ல" என்றால் இலக்ணம்.
இலக்கிணம் என்பது முதல் வீடு (பாவம்). வீடு என்று தமிழில் குறிப்பிடப்படுவதை ப்ஹாவம் என்று வடமொழியில் சொல்கிறார்கள்.
அதிலிருந்து கடிகாரச் சுற்றுபடி எண்ண வேண்டும். இலக்கிணம் முதல் வீடானால் அதற்கு அடுத்த வீடு 2 ஆகும்.
ஆக பாவம் என்பது இராசி கட்டத்தின் வீடுகள் - ஒன்று முதல் 12 வீடுகள்.
முதல் வீடு (பாவம்):
உடல் தோற்றம், பொலிவு, குணங்கள், வாழ்கையின் நிலை, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை முதல் வீட்டின் வலிமை, அதில் தங்கியிருக்கும் கோள்கள் அவற்றின் சிறப்பு முதலியவற்றைக் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.
இரண்டாம் வீடு (பாவம்):
குடும்ப சூழ்நிலை, செல்வம், கலை, பேச்சுத் திறமை, கல்வி ஆகியவற்றிக்கு உரியது.
மூன்றாம் வீடு (பாவம்):
உடன் பிறப்புகள், பணியாள்கள், வண்டி வாய்ப்புகள், இசை ஞானம், அரசின் ஆதரவு, துணிவு, வீர தீரச் செயல்கள், உறவினர். நண்பர்கள் உதவி முதலியவற்றிற்கு அடிப்படையானது.
நான்காம் வீடு (பாவம்):
கல்வி, நில புலன்கள், செல்வம், கால் நடைகள், முன்னோர் சொத்து. நண்பர்கள் ஆதரவு, உதவி முதலியவற்றுடன் பெற்றவளின் உடல் நலன்களையும் அறிய அடிப்படையானது. இந்த வீட்டை மாத்ரு வீடு என்று கூறுவர்.
ஐந்தாம் வீடு (பாவம்):
இதைப் பிள்ளை பேருக்கான வீடு என்று அழைப்பர். ஒருவருக்குச் சந்ததி அமைதல் – குழந்தைகள் பிறப்பது – எப்படியிருக்கிறது என்பதை அறிய ஐந்தாம் வீடு அடிப்படையானது.
இந்த வீட்டின் வலிமையைக் கொண்டுதான் ஒருவருக்கு மழலைச் செல்வம் இருக்குமா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும். மற்றும் சாதகர் ஒருவரின் பூர்வ புண்ய பாவம், புகழ், பாவம், செல்வம், செல்வாக்கு, அறிவு நுட்பம் ஆகியவற்றையும் இந்த ஐந்தாம் வீடே எடுத்துக் கூறக் கூடியது.
ஆறாவது வீடு (பாவம்):
தாய் மாமன் குணம், உடல் நலம், உதவி முதலியவற்றைக் கண்டறிய அடிப்படையான வீடு இது. ஜாதகரின் உடல் நலம், எதிரிகளின் தன்மை, கடன், பொருள் சேதம், விபத்துகள் முதலியவற்றையும் எடுத்துக் கூறுவது இந்த ஆறாவது வீடு.
ஏழாவது வீடு (பாவம்):
காதல் திருமணம், மனைவி உறவு முறை, நொருங்கிய உறவினர், உடன் பிறப்பு ஆதரவு. உதவி, வழக்குகள், அரசு ஆதரவு. சமூகத்தில் செல்வாக்கு. பகை முதலியவற்றைக் குறிக்கக் கூடியது. இதை களத்திர-மனைவி-பாவம் என்று பொதுவாகச் செல்வார்கள்.
எட்டாவது வீடு (பாவம்):
ஆயுள் தொடர்பான தகவல் தரும் வீடு இதுதான். பெண்களுக்கு தாலி பலத்தைக் குறிக்கும் இராசி வீடும் இதுவே. உடல் கோளாறு, விபத்துகள். பொருள் இழப்பு, நோய்கள், மனைவியுடன் - கணவனுடன் - உறவு முறை முதலியவற்றையும் இந்த வீட்டை கொண்டே முடிவெடுக்க வேண்டும்.
ஒன்பதாம் வீடு (பாவம்):
முன்னோர், மூதாதையர், தந்தை, நல்லூழ், பொன், பொருள், கொடை வழங்கும் குணம். தொலைவு நாடுகள் பயணம், பிறவிப் பயன், கடவுள் நம்பிக்கை, பேரன் பேத்திகள், முன்னோரின் கொடை முதலியவற்றை அறிய ஒன்பதாம் வீடு உதவுகிறது.
பத்தாம் வீடு (பாவம்):
இதை, பணி வீடு, வேலை வீடு, தொழில் வீடு என்றும் அழைப்பார்கள். தொழில், அரசு பதவி, செல்வம், வெளி நாட்டுப் பயணங்கள், கடவுள் நம்பிக்கை முதலியவற்றைக் கண்டறியலாம். சாதகருக்குக் கர்மம் - ஈமக்கடன் - செய்ய பிள்ளைகள் உண்டா என்பதை அறியவும் இந்த வீடு அடிப்படையானது.
பதினொன்றாம் வீடு (பாவம்):
வருவாயை குறிக்கும் வீடு இது, மூத்த அண்ணனுக்கான வீடு இது. உடன் பிறந்தோர் உறவு முறை, கல்வி, நகைகள், உடை, வீடு, மன மகிழ்ச்சி முதலியவற்றை பதினொன்றாம் வீடு எடுத்துக் காட்டுகிறது.
பன்னிரண்டாம் வீடு (பாவம்):
இதை செலவு வீடு என்று சொல்வர். அழிவு வீடு, திருட்டு வீடு, பறிபோகும் வீடு என்றும் மறைவிடம் என்றும் சொல்வார்கள். பன்னிரண்டாம் வீடு நன்றாக இருந்தால் சாதகருக்குப் பொன்னும், புகழும் பெருகும். பகவர்கள் இருந்தாலும், பொருள் இழப்புகள் நேரிட்டாலும் இராசிக்காரர் மணம் தள்ராமல் இருப்பார்.
ஆணாக இருந்தால் மனைவியின் நடத்தை, பெண்ணாக இருந்தால் கணவனின் நடத்தையை அறிய இந்த வீடு அடிப்படையானது.
பன்னிரண்டு வீடுகளின் தன்மைகள் அனைத்தும் பொதுவானது. இவற்றில் தங்கும் கோள்கள் நிலை - விலிமை தன்மை ஆகியவற்றைக் கொண்டே கணக்கிட வேண்டும்.