தினப்பொருத்தம் என்றால் என்ன?
தினம் என்றால் நாள்தோறும் என்று பொருள். இந்த நாள் பொருத்தம் இருந்தால், ஆணும் பெண்ணும் கூடி வாழும் பொழுது அவர்கள் நாளது பொழுதும் மகிழ்வுடன் வாழ்வார்கள் என கொள்ளலாம்.
நிலவு ஒவ்வொரு நாளும் ஒரு விண்மீனில் பயனிக்கும். அதாவது 27 விண்மீன்களை 27 நாட்களில் கடக்கும்.
அந்த முழு சுழற்சியின் போதும் இரண்டு இராசிகளும் ஒத்து வாழ்ந்தால் உடல் நலனிலும் மன நலனிலும் சிறந்து வாழ்வார்கள்.
பெண் விண்மீனில் இருந்து ஆணுடைய விண்மீன் வரை எண்ணிப்பார்க்க வேண்டும். வரும் எண்ணை 9 -ஆல் வகுத்தால் மிச்சம் வராமல் இருந்தால் அது சிறப்பான பொருத்தம்.
அதாவது, 9, 18, 27 ஆம் இடங்களில் வரும் விண்மீன் கொண்ட ஜாதகம் நன்றாக தினப்பொருத்தம் பொருந்துகிறது.
அப்படி மீதம் வருகிறது என்றாலும், அந்த மீதம் 3, 5, 7 என்று வரக்கூடாது. அதாவது 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 25 ஆகிய இடங்களை கொண்ட விண்மீன்கள் ஜாதகம் பொருந்தாது.
எடுத்துக்காட்டாக பெண் பிறந்த விண்மீன் பரணி என்று வைத்துக்கொண்டால் மிருகசீரிடம் மூன்றாவதாக வருகிறது. ஆக, இது பொருந்தாது. சித்திரை 12 -ல் வருகிறது. இந்த 12 -யை 9 ஆல் வகுத்தால் மீதம் 3 வருகிறது. ஆக, இது பொருந்தாது.
தினப்பொருத்தம் பார்க்கும் போது பெண் விண்மீனில் இருந்து 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24, 26 ஆம் விண்மீனாக ஆண் விண்மீன் வருமானால் அது பொருந்துகிறது என பொருள்.
ஜோதிடத்தின் படி நாம் கணக்கில் கொள்ளும் விண்மீன்களின் எண்ணிக்கை இருபத்தேழு,
இவற்றை ஒன்பதால் வகுத்து ஒவ்வொரு கோளுக்கும் மும்மூன்று விண்மீன்களாக அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். மூன்று விண்மீன்கள் செர்ந்து ஒரு இராசி என்றாகிறது.
ஒவ்வொறு கோள்களுக்கும் 3 விண்மீன்கள் என கணக்கிட்டால் மொத்தம் 27 விண்மீன்கள் உள்ளன.
மேலும், இந்த விண்மீன்களை மூன்று தொகுப்புகளாக அதன் வரிசை நிலையை பொறுத்து வகுந்துள்ளனர்.
அஸ்வினி முதல் ஆயில்யம் வரையில் முதல் தொகுப்பு.
பத்தாவது விண்மீனிலிருந்து 18 ஆவது விண்மீன் வரை இரண்டாம் தொகுப்பு.
19 ஆவது விண்மீனிலிருந்து 27வது விண்மீன் வரை மூன்றாவது தொகுப்பு.
இந்த தொகுப்பை விண்மீன் வரிசை என்றும் சொல்லலாம். அதாவது முதல் தொகுப்பை முதை வரிசை என்றும், இரண்டாம் தொகுப்பை இரண்டாம் வரிசை என்றும், மூன்றாவது தொகுப்பை மூன்றாவது வரிசை என்றும் கூறலாம்.
இந்த விண்மீன் தொகுப்புகளை மனதில் வைத்துக் கொண்டு இந்த தினப்பொருத்தம் என்றழைக்கப்படுகிற விண்மீன் பொருத்தத்தைப் பார்க்க வேண்டும்.
ஒவ்வொறு தொகுப்பிலும் விண்மீன் இடம் பெற்றுள்ள நிலையை பொருத்து அவை குழுக்களாக பிரிக்கப்படுகிறது.
அசுவினி முதல் தொகுப்பில் முதல் விண்மீன். மகம் இரண்டாம் தொகுப்பில் முதல் விண்மீன். மூலம் மூன்றாம் தொகுப்பில் முதல் விண்மீன். ஆக இவை கொண்டுள்ள நிலைகள் ஒன்றாக இருப்பத்தால் இவை ஒரே இனமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இப்படியாக, பரணி, பூரம், பூராடம். இவை மூன்றும் வெள்ளிக்கோளுக்கு உரியவை. இவை மூன்றும் 2, 11, 20 ஆம் விண்மீன்கள்,
கிருத்திகை , உத்திரம் , உத்திராடம் இவை மூன்றும் ஞாயிறுக்கு உரியவை . இவை மூன்றும் 3, 12, 21 ஆம் விண்மீன்கள்,.
ரோகிணி, அஸ்தம், திருவோணம். மூன்றும் நிலவிற்கு உரியவை. 4,13,22, மூன்றும் ஒரே இனம்.
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் 5, 14, 23 ஆம் நிலையில் உள்ளன. தொகுப்பு படி இவை ஒரே இனம். இவை செவ்வாய்க்கு உரியவை.
திருவாதிரை, சுவாதி, சதயம் 6, 15, 24 ஆம் விண்மீன்கள். இவை மூன்றும் இராகுக்கு உரியவை.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி 7, 16, 25 ஆம் விண்மீன்கள். இவை மூன்றும் வியாழனுக்கு உரியவை.
பூசம், அனுசம், உத்திரடாதி ஆகியவை முறையே 8, 17, 26 ஆம் விண்மீன்கள். இவை மூன்றும் காரி என்கிற சனிக்கு உரியவை.
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய விண்மீன்கள் 9, 18, 27, ஆம் இடத்தில் உள்ளன. தொகுப்பு வரிசையில் இவை 9 ஆம் நிலையில் உள்ளன. ஆகவே இவை ஒரே இனம். இவை மூன்றும் அறிவன் என்கிற புதனுக்கு உரியவை.
இந்த விண்மீன் தொகுதிகளை மனத்தில் வைத்துக் கொண்டு பொருத்தத்தைப் பார்த்தால் துல்லியமாக கணக்கிடலாம்.
பெண்ணின் விண்மீன் எந்த தொகுப்பானாலும் ஆணின் வெண்மீன் நிலையை எண்ணி வருகையில் அது அதன் தொகுப்பில் 1 ஆம் விண்மீனாக இருக்குமேயானால் அது சுமாராக பொருந்துகிறது என கணக்கிடலாம். இது, பெண்ணின் விண்மீன் தொகுப்பிற்கு முந்தைய தொகுப்பில் இருக்க வேண்டும்.
பெண் விண்மீன் எந்த தொகுப்பில் இருந்தாலும் ஆண் விண்மீன் அதே தொகுப்பிலோ அதற்கு அடுத்த தொகுப்பிலோ, 1 ஆவது விண்மீனாக வருகிறது என்றால் பொருத்தம் மிகச்சுமார். அதாவது சுமாருக்கும் கீழ் நிலை.
அதன் தொகுப்பில் 2 ஆவது விண்மீனாக உள்ளது என்றால் பொருத்தம் சுமார்.
அதன் தொகுப்பில் 3 ஆவது விண்மீன் என்றால் பொருத்தம் இல்லை.
அதன் தொகுப்பில் 4 ஆவது விண்மீன் என்றால் பொருத்துகிறது.
அதன் தொகுப்பில் 5 ஆவது விண்மீன் ஆனால் பொருத்தம் பொருந்தாது.
அதன் தொகுப்பில் 6 ஆவது விண்மீன் ஆனால் பொருத்தம் பொருந்தும்.
அதன் தொகுப்பில் 7 ஆவது விண்மீனாக இருப்பின் பொருத்தம் பொருந்தாது.
அதன் தொகுப்பில் 8 ஆவது விண்மீன் என்பது பொருத்தம் சுமார்.
அதன் தொகுப்பில் 9 ஆவது விண்மீன் நிலையில் இருந்தால் பொருத்தம் பொருந்தும்.
ஆக, தொகுப்பில் உள்ள 3, 5, 7 பொருந்தாது.
1 மிகச்சுமார்,
2, 8 சுமார்,
4, 6, 9 நன்றாக பொருந்தும் என்று சொல்ல வேண்டும்.
27 வது விண்மீன் பெண் விண்மீனிலிருந்து ஆண் விண்மீன் 27 ஆவதாக வந்தால் அந்த இரண்டு விண்மீன்களும் ஒரே இராசியாக இருந்தால் பொருந்தும்.
வெவ்வேறு இராசியானால் பொருந்தாது.
எடுத்துக்காட்டாக , பெண்ணின் விண்மீன் பரணி என்றால், அதற்கு இருபத்தேழாவது விண்மீனாக வருவது அசுவினி.
இந்த இரண்டும் ஒரே இராசியைச் சேர்ந்தவை. இப்படி ஒரே இராசி, ஆண் பெண் இராசியாக அமைந்து, பெண்ணுக்கு, ஆண் விண்மீன் 27 ஆக இருந்தால் பொருந்தும்.
அதே வேளையில் மூலம் விண்மீனில் பிறந்த பெண்ணுக்கு தனுசு இராசி. 27 ஆம் இடத்தில் உள்ள கேட்டை, விருச்சிக இராசியாக வருவதால் பொருந்தாது.
அதாவது வேறு வேறு இராசியாகி 27 ஆவது விண்மீனாக இருப்பின் பொருந்தாது.
ஆணின் விண்மீனும் பெண்ணின் விண்மீனும் ஒரே இராசியாக இருந்தால் பொருந்துகிறது என்கிறோம். அதே விதியை ஒரே விண்மீனில் பிறந்தவர்களுக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது.
ஒவ்வொறு விண்மீனும் 4 பாதங்களாக பிரிக்கப்பட்டிருக்கும்.
ஆண், பெண்ணுக்கு முன்னுள்ள விண்மீன் பாதத்தில் பிறந்திருந்தால் நல்லது என்பது பொது கணக்கு.
ரோகிணி, திருவாதிரை, மகம், அஸ்தம், விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய எட்டு விண்மீன்களும், ஆண் பெண் ஒரே விண்மீனாக அமைந்திருந்தாலும் மிகவும் பொருந்தும்.
அசுவினி, கிருத்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுசம், பூராடம்., உத்திராடம் என்ற 11 விண்மீன்களில் பிறந்த ஆணும் பெண்ணும் ஒரே விண்மீனாக அமைந்திருந்து ஒன்று செர்ந்தால் சுமார் நிலை எனலாம்.
பரணி, ஆயில்யம், சுவாதி , கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் , பூராட்டாதி ஆகிய இந்த எட்டு விண்மீன்களில் பிறந்த ஆண் பெண் ஒரே விண்மீன் கொண்டிருந்தால் பொருத்தமில்லை.
விண்மீன்கள் ஒன்றாக இருந்தாலும், ஒரே இராசியில் இருக்க வேண்டும் என்கிற விதியும் உள்ளது என்பதை கணக்கில் கோள்ள வேண்டும்.