பிறந்த ஜாதகத்தில் குறிப்பிட்ட லக்னத்திற்கும், நிகழ்நிலை தளங்கள் மூலமாக இயற்றப்படும் ஜாதகத்தில் லக்னம் இடம் மாறி வருவது ஏன் என்று பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எதை சரி என்று ஏற்றுக் கொள்வது? இது சரி என்றால் அது முற்றிலும் தவறா? திருமண பொருத்தம் பார்க்கும் நேரத்தில் இத்தகைய குழப்பங்கள் ஏற்படுவது எதனால்?
மேலே உள்ள கேள்விகளுக்கு பதில் வேண்டுமென்றால், லக்னம் கணிக்கும் முறை குறித்த அடிப்படையை புரிந்து கொண்டால் போதும்.
இந்திய ஜோதிட கணிப்பு முறைப்படி, ஒரு நாளானது அன்றைய பொழுதில் ஞாயிறு தோன்றும் நேரம் முதல் மறுநாள் காலையில் ஞாயிறு தோன்றும் நேரம் வரை கொண்டதாகும். எடுத்துக்காட்டாக, மதுரையில் 21 சூன் 2022 அன்று ஞாயிறு காலை 05:58 மணிக்கு எழுந்தது. இந்திய ஜோதிட கணிப்பின்படி, 21 சூன் 2022 என்கிற நாள், காலை 05:58 மணி முதல் மறுநாள் காலை ஞாயிறு தோன்றும் நேரம் வரை கொண்டது.
ஒவ்வொரு ஊருக்கும், ஞாயிறு தோன்றும் நேரம் மாறுபடும். எடுத்துக்காட்டாக, திருச்சிராப்பள்ளியில், 21 சூன் 2022 அன்று ஞாயிறு காலை 05:54 மணிக்கு எழுந்தது. அதன்படி திருச்சியை பொருத்தவரை, 21 சூன் 2022 என்ற நாள் அன்று காலை 05:54 துவங்கியது. அதேவேளையில் மதுரையில் அதே நாள் காலை 05:58 துவங்கியது.
லக்னம், ஞாயிறு தோன்றிய நேரத்தில் இருந்து, மாதம் மற்றும் நாளை பொறுத்து ராசி வீட்டில் அமர்ந்து, ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு ராசி வீடு என்கிற வகையில் 12 ராசிகளிலும் பயணிக்கும்.
மேலே குறிப்பிட்டபடி, மதுரையில் லக்னம் பயணிக்கும் நேரமும், திருச்சியில் லக்னம் பயணிக்கும் நேரமும் வேறுபடும். இடைவழி சில நிமிடங்கள் என்கிற அளவில் இருப்பதால், ஜாதகம் கணிக்கும் பொழுது, எந்த ஊர் பஞ்சாங்கத்தை கணக்கில் எடுத்துக் கொண்டார்கள் என்பதை குறிப்பாக கவனிக்க வேண்டும்.
படத்தில் எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில், ஜாதகர் 10.08.1998 அன்று பிற்பகல் 12.40 மணிக்கு பிறந்துள்ளார். அவர் ராமநாதபுரத்தில் பிறந்ததாக எடுத்துக்கொண்டால், அவரது பிறப்பு லக்னம் விருச்சிகம். அதே வேளையில் அவர் திருச்சியில் பிறந்ததாக எடுத்துக்கொண்டால், அவரது பிறப்பு லக்னம் துலாம்.
மென்பொருள் விற்பனையாளர்கள் அல்லது பஞ்சாங்கத்தை அடிப்படையாக வைத்து பிறந்த ஜாதகம் கணிக்கும் ஜோதிடர்கள், பூமிரேகை குறியீடுகளாக எந்த ஊரினுடைய நெட்டாங்கு மற்றும் அகலாங்கு எடுத்து கணக்கிட்டனர் என்ற தகவலையும், எடுத்துக்கொண்ட நெட்டாங்கு / அகலாங்கு அலகுகளையும் தெளிவாக ஜாதகத்தில் குறிப்பிட வேண்டும். அப்பொழுதுதான், பிறந்த லக்னம் துல்லியமாக கணிக்கப் பட்டதாக கருதமுடியும்.
லக்னம் மாறி மாறி வருவது குறித்து தெளிவு ஏற்பட்டிருக்கும் என நம்புகிறோம்.