திருமணப் பொருத்தம் பார்க்கும்போது அடிப்படையாக கவனிக்கப்படும் ஒன்று பையனுக்கோ அல்லது பெண்ணுக்கோ செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதுதான்.
திருமண பொருத்தம் என்றாலே இந்த செவ்வாய் தோஷம் என்கிற ஒன்று, திருமணத்திற்கு தேவையான அடிப்படை பொருத்தமான மனப்பொருத்தம் இருப்பினும், ஜாதக பொருத்தம் இல்லை என்கிற நிலையை தருகிறது.
செவ்வாய் தோஷம் இருக்கிறது என்ற ஒன்றினால் பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருவதை நாம் காண்கிறோம்.
தோஷம் vs யோகம்
ஒவ்வொரு ஜாதகருக்கும் பல்வேறு விதமான யோக அமைப்புகள் அவர்களது பிறப்பு ஜாதகத்தில் இடம்பெற்றிருக்கும்.
இந்த யோகங்கள் அந்த ஜாதகருக்கு பலன் தருவது குறித்து ஆருட வல்லுனர்கள் எடுத்துரைக்கும் பொழுது, யோகங்கள் ஏற்புடைய தசா புக்தி நேரங்களில் மட்டுமே பலன் தரும் என்று கணிப்பார்.
பிற நேரங்களில், ஜாதகருக்கு யோகம் இருப்பினும், அது எவ்வித சிறப்பு பலனையும் தராது என்பர்.
அதேபோன்று, தசா புக்தி நேரத்திலும், சிறப்பான யோகங்கள் இருந்தாலும், ஆரூட கோள்களின் அப்போதைய நிலையை பொறுத்து பலன்களை ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் என்கின்றனர் ஆருட வல்லுனர்கள்.
யோகங்களின் பலன் கிடைப்பதற்கு இத்தனை தடைகள் இருக்கும் என்று எடுத்துச் சொல்லும் ஆருட வல்லுனர்கள், எதனாலோ, தோஷங்களின் தாக்கம் ஜாதகர் மீது குறிப்பிட்ட சூழலில் மட்டுமே ஏற்படும் என்பதை எடுத்துச் சொல்வது இல்லை.
தோஷம் என்றாலே ஏதோ வாழ்நாள் முழுவதும் அதன் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும் என்பதை போன்ற ஒரு கணிப்பை மக்களிடையே ஏற்படுத்தி விட்டதால், தோஷங்கள் குறித்து மக்களுக்கு ஒரு அச்சமான மனநிலை நிலவுகிறது.
யோகம் முழு பலனை தருவதற்கு தசா புக்தி நடைபெறும் நேரத்தை ஒப்பிடும் ஆருட வல்லுநர்கள், தோஷங்களை சில வகை சடங்குகள் மூலம், சில சொற்களை ஓதுவதன் மூலமும், நீக்கி விடலாம் என்கிற தோஷங்கள் குறித்து தவறான கருத்தை எடுத்துரைப்பது வேதனையே.
குறிப்பாக செவ்வாய் தோஷம் குறித்து அஞ்சாதவர்கள் யாரும் இல்லை. உண்மையில் இந்த செவ்வாய் தோஷம் எவ்வித தீய பலனையும் கொடுப்பது இல்லை.
செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
செவ்வாயின் ஆட்சியை கொண்டவர்கள் பிறரை விட சற்றே கூடுதலான உணர்ச்சிகள் உடையவர்களாக திகழ்வர் என ஜாதக வல்லுனர்கள் கணிக்கின்றனர்.
அதாவது, சிலருக்கு அந்த உணர்ச்சியானது, கோபமாகவும், எடுத்தறிந்து பேசும் குணமாகவும், சிலருக்கு பாலியல் உணர்ச்சியாகவும் இருக்குமாம்.
செவ்வாய் ஆட்சி பெற்றவர்களுக்கு உடலுறவில் பெருமளவு நாட்டம் இருக்கும் என ஆருட வல்லுநர்கள் எடுத்துச் சொல்கின்றன. அதற்காக, அத்தகைய ஜாதக அமைப்பு உடையவர்கள் திருமணத்திற்கு புறம்பான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்பவர் என்று கருதுவது கூடாது. அவர்கள் சிறந்த ஒழுக்கமுடையவர்களாகவே இருப்பர்.
தோஷம் உள்ளவர்களுக்கு, தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்து வைத்தால், அவர்களுக்கிடையில் தாம்பத்திய ரீதியான பிரச்சனைகள் ஏற்படும், என்பதாலேயே தோஷம் உள்ளவர்களுக்கு தோஷமான ஜாதகத்தையே சேர்க்க வேண்டும் என்கின்றனர்.
தோஷங்களும் நீங்கிவிடும்:
யோகங்கள் பலம் தருவது போலவே, தோஷங்களும் சில குறிப்பிட்ட ஜாதக அமைப்புச் சூழல் ஏற்படும்பொழுது முற்றாக விலகிவிடும். ஆகவே செவ்வாய் தோஷம் குறித்து அச்சமடைந்து, அது குறித்து தவறான புரிதல் கொண்டு, அதை அடிப்படையாக வைத்து மனப்பொருத்தம் இருப்பினும் திருமணம் முடியாமல் இருப்பது தவறான வழக்கமாகும்.