ஜோதிட கணிப்புகள் பலமுறை தோற்றுப் போவது ஏன்?
கடந்த கட்டுரையில், வான் வழியில் சுற்றி வரும் கோள்களும், விண்மீன்களும், புவியின் ஓட்டத்தை மற்றும் அதன் தள அமைப்பை மாற்றி அமைக்கின்றன என்பதை அறிவியல் ரீதியாக விளக்கினோம்.
அதில் நாம் சொல்ல முற்பட்டது, வான்வழி கோள்களின் இருப்பிடங்களை கொண்டு ஜோதிட கணிப்புகள் மேற்கொள்ள இயலும் என்கிற கூற்றை.
அறிவியல் ரீதியாக அவற்றை நாம் ஏற்றுக் கொண்டாலும், வாழ்நாளில் பல நேரங்களில் இந்த கணிப்புகள் பொய்யாகி போவதையும் உணர்ந்து இருக்கிறோம்.
எடுத்துக்காட்டாக: உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பகை என கணவருக்கு அன்றைய நாள் ஜோதிட பலன் கணித்திருக்கும். ஆனால், அன்றைய நாளில் தான் அவர் தன் துணையுடன் மிக்க மகிழ்வாக பொழுதை கழித்திருப்பார்.
எதனால் இங்கே ஜோதிட கணிப்பு பொய்யாகி விடுகிறது?
கணவருக்கு ஜோதிடம் அந்த நாளில் கணவன் மனைவியிடையே பகை என்று கணித்திருந்தாலும், அவரின் வாழ்க்கை துணைக்கு, அதற்கு நேர் எதிர்மாறான கணிப்பை கொடுத்திருக்கும். மேலும், ஒருவர் ஜாதகம் மட்டுமே ஒருவரை ஆட்டிப் படைக்கும் என்பது இல்லை.
கணவன்/மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உடன் பிறந்தவர்கள், குருதி உறவுடைய உறவினர்கள் என பலரது ஜாதக அமைப்புகள் ஒரு ஜாதகரை பாதிக்கும். துல்லியமாக ஜாதகம் கணிக்க வேண்டும் என்றால், ஜாதகரின் மேற் சொன்ன உறவு முறைகளில் உள்ள அனைவரது ஜாதகத்தையும் புரட்டிப் பார்த்து ஆராய வேண்டும்.
அது மட்டுமல்லாது, கோள்களின் பார்வையையும் அவை இருக்கும் வீட்டையும் பொறுத்து அவை தரும் நன்மை தீமைகள் மாற்றி அமைக்கப்படும்.
அதனால் தான், துவக்க ஊழியில் வாழ்ந்த ஆருட வல்லுனர்கள், நாட்டிற்கான - இனங்களுக்கான பொதுவான கணிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தி வந்தனர். தனிமனிதனுக்கு என்று அவர்கள் பலன் கூற முற்பட்டது இல்லை.
பின் நாட்களில், ஜோதிட ஆராய்ச்சிகள், தனிமனித வாழ்க்கையையும் கணிக்கும் அளவிற்கு துல்லியமானதாக விதிமுறைகள் எழுதப்பட்டன.
இங்கேயும் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். மூல ஜோதிடங்களை பொறுத்தவரை, தசா புத்தி பலன்கள் என்று ஒன்று மட்டுமே இருந்தது. தொடர்ந்து யோக அமைப்புகளும், அவை செயல்படும் தசா புத்தி ஊழிகளும் கணிக்கப்பட்டன.
நாள் பலன், கிழமை பலன், திங்கள் பலன் போன்ற குறுகிய நேரங்களை கொண்ட பலன்கள் கொடுக்கப்படவில்லை.
உங்கள் பிறந்த நேரம், நாள், மற்றும் ஊர் துல்லியமாக தெரிந்தால் உங்களால் ஓரளவிற்கு சரியான தசா புக்தி பலன்களை கணித்து விட முடியும். இந்த தசா புத்தி பலன்கள் பெரும்பாலும் நமக்கு ஏற்படும் நன்மை தீமைகளை எடுத்துரைக்கும். இந்த கணிப்பு முறையில் பெரிய அளவிலான வேறுபாடுகள் இருக்காது.
நாளும் பொழுதும் எல்லா நேரமும் உங்களின் பிறந்த நேரத்தை வைத்து உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்குமோ என்கிற அச்சத்தில் நீங்கள் வாழ்ந்தீர்கள் என்றால், பெரும்பாலும் உங்களுக்கு மன உளைச்சலும், அதை பயன்படுத்தி உங்களை பலர் ஏமாற்றுவதற்கான வாய்ப்பே உள்ளது.
நாள் கணிப்புகளை பெரும்பாலும் பொழுதுபோக்குக்காக மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். கோள்களின் பெயர்ச்சியை வைத்து கொடுக்கப்படும் கணிப்புகளும் இதற்கு பொருந்தும். வியாழன் பெயர்ச்சி, அறிவன் பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என நாள்தோறும் விளம்பர பக்கங்களை ஏற்படுத்துவதற்காக ஊடகங்கள் இத்தகைய கணிப்புகளை தொடர்ந்து வெளியிடுகின்றன. ஆருட கணிப்பு இலக்கணங்களின் படி, இத்தகையன எல்லாம் பின் நாட்களில் பிழைப்பிற்காக அவரவர் சேர்த்துக் கொண்டவையே.
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் எனும் வள்ளுவனின் வாக்கை மெய்யன ஏற்று வாழ்க்கையில் உழைத்து முன்னேறுவோம்.