மகாளய பட்ச நாட்கள் என்பது நன்மை நிறைந்த நாட்கள் ஆகும்.
மகாளய பட்சம் என்பது பதினைந்து நாட்கள் உள்ளடக்கியது. ஆவணி திங்களின் முழு நிலவிற்கு அடுத்த நாளில் இருந்து மகாளய பட்சம் தொடங்குகிறது. இந்த பதினைந்து நாட்கள் என்பது நம் மூதாதையர்கள் (வட மொழியில் பித்ரு), வானுலகத்தில் இருந்து மண்ணுலகிற்கு வருகிறார்கள் என்பது நம்பிக்கை. அவர்கள் அங்கிருந்து, நம் வீட்டை மறைந்திருந்து பார்க்கிறார்கள். நம் குடும்பத்தின் நிலையை அறிந்து கொண்டு நம்மை வாழ்த்துகிறார்கள் என்பதும் நம்பிக்கை.
ஒவ்வொரு திங்களிலும், புது நிலவு நாளில், மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது பிராமண வேதநெறி கடைபிடிப்போரின் ஒரு வழக்கமாகும். கருட புராணம் என்னும் நூலில் இது குறித்த தெளிவு கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆடி மற்றும் தை திங்களில் வரும் புது நிலவு நாளன்று மற்றும் மகாளய புது நிலவு நாளன்று சிறப்பான நாட்களாக கருதப்படுகிறது. அதிலும் மகாளய புது நிலவு நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
"மறந்து போனவனுக்கு மகாளய புது நிலவு நாள் (அமாவாசை) " என்பார்கள்.
அதாவது மூதாதையர்களின் இறந்த நாள் தெரியாதவர்கள் அல்லது மறந்து போனவர்கள், ஆண்டுதோறும் புரட்டாசி திங்களில் வரும் மகாளய புது நிலவு நாளன்று தர்ப்பணம் கொடுத்தால் 21 தலைமுறைகளை சேர்ந்த முன்னோர்கள் விண்ணுலகை அடைவார்கள் என சொல்லப்படுகிறது.
பொதுவாக, இந்த தர்ப்பணம் கொடுப்பதற்கு, முறைகள் அறிந்தவரை வைத்து செய்யலாம். அப்படி செய்ய விருப்பம் இல்லாதவர்கள், அல்லது வாய்ப்பு இல்லாதவர்கள்,
"முன்னோர்களின் உயிர் அமைதியடைய இந்த தர்ப்பை கலந்த நீரை அவர்களுக்கு வழங்குகிறேன்"
என்று ஒவ்வொரு முன்னோர் உயிரையும் தனித்தனியாக உறவுமுறையுடன் சேர்த்து, வாய் விட்டு சொல்லி, தர்ப்பணம் கொடுக்கலாம்.
இப்படி தர்ப்பணம் கொடுக்க எல்லோருக்கும் தகுதி கிடையாது. பெற்றவள் மட்டும் இறந்து, தந்தை உயிருடன் இருந்தால், மணைவிக்காக கணவர் மட்டுமே தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதாவது பெற்றவளுக்கு தந்தை உயிருடன் இருக்கும் வரை தர்ப்பணம் மகன்களால் கொடுக்க கூடாது.
மாற்றாந்தாய், பெரியப்பா, சித்தப்பா, உடன் பிறப்புகள், மகன்கள், அத்தை , தாய்மாமன், தாய்வழி பெரியம்மா மற்றும் சித்தி, வளர்ப்புத்தாய் ஆகியோருக்கு மகாளய பட்ச நாட்களில், தர்ப்பணம் செய்யலாம்.
மகள், மனைவி, மாமனார், மாமியார், உடன்பிறந்தவளின் கணவர், மருமகள் , மச்சினன், ஒன்று விட்ட அண்ணன் தம்பி, மாப்பிள்ளை, மருமகன், ஆசிரியர், தோழன் என்று யாருக்கு வேண்டுமானாலும் இந்த நாட்களில் தர்ப்பணம் செய்யலாம்.
தர்ப்பணம் கொடுக்கும் முறைகள்
முன்னோர் இறந்த நாள், ஆண்டு தோறும் வரும். அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணத்திற்கு கட்டாயம் கறுப்பு எள்தான் பயன்படுத்த வேண்டும். கட்டாயம் கீழ்க்கண்ட பெயர்களை சொல்லிச் செய்ய வேண்டும்.
தந்தை வழி
உங்கள் தகப்பனாரின் தகப்பனார் – தாயார்
உங்கள் தகப்பனாரின் தாத்தா – பாட்டி
உங்கள் தகப்பனாருடைய தகப்பனாரின் தாத்தா – பாட்டி
தாய் வழி
உங்கள் தாயாரின் தகப்பனார் – தாயார்
உங்கள் தாயாரின் தாத்தா – பாட்டி
உங்கள் தாயாருடைய தகப்பனாரின் தாத்தா – பாட்டி
மேற்கண்டவர்களுக்கு கட்டாயம் தர்ப்பணம் செய்தல் வேண்டும். மேலும் உங்கள் குருதி தொடர்புடைய உறவுகள் இறந்திருந்தால் கட்டாயம் அவர்களுக்கும் சேர்த்துக் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். உங்கள் தகப்பனாருடன் பிறந்தவர்கள் இறந்திருந்து அவர்களுக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தால் கட்டாயம் அவர்களுக்கு சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
தாய் தந்தை இருவருமே இருப்பவர்களுக்கு தர்ப்பணம் செய்ய உரிமை கிடையாது. தாயோ தந்தை இல்லாதவர்கள், அல்லது இருவருமே இல்லாதவர்கள் தர்ப்பணம் செய்யலாம்.
முதலில் யாருக்கு இறந்த நாளோ அவருக்குத் தர்ப்பணம் செய்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக இறந்த நாள் தந்தைக்கு என்றால், முதலில் தந்தைக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும். பின் தந்தை வழி உள்ளவர்களுக்கு, பின் தாய் வழியில் உள்ளவர்களுக்குச் செய்ய வேண்டும்.
பெண்கள் தர்ப்பணம் செய்யலாமா?
தங்களுடன் ஆண் யாரும் பிறக்காத நிலையில் கட்டாயம் செய்யலாம். பிறந்து இறந்திருந்தால், கொடுக்கக்கூடாது. தந்தை அல்லது தாய், சூழ் நிலைகளால், வேறு யாருடன் சேர்ந்த ஆண் பிள்ளை பெற்றிருந்தாலும், அந்த ஆண்பிள்ளையும், உடன்பிறப்பாக கருதப்படுவதால், தர்ப்பணம் கொடுக்கக்கூடாது.
தர்ப்பணம் ஆற்றங்கரையில்தான் செய்ய வேண்டுமா?
எங்கு வேண்மானாலும் செய்யலாம். ஆற்றில், கடலில், அருவியில், கிணற்றடியில், நமது சாமியறையில், என எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். வரவேற்பரையில் கூட செய்யலாம். மனம் தூய்மையாக இருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருப்போர் என்ன செய்யலாம்?
வீட்டில் செய்வது சிறப்பு.
தர்ப்பணத்திற்கு தனியாக ஆட்களை வைத்துத்தான் செய்ய வேண்டுமா?
அப்படி ஒரு கட்டாயம் இல்லை. தங்களுக்கு முறைகள் தெரிந்திருக்குமேயானால் தாங்களே செய்து கொள்ளலாம்.
தர்ப்பணம் அன்று விரதம்
தர்ப்பணம் செய்யும் நாள் அன்று காலை சாப்பிடக் கூடாது. பிற்பகல் உணவு சாப்பிடலாம். உணவில் கத்திரிக்காய், வாழைக்காய் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். வெங்காயம், பூண்டு, அசைவம் உண்ணுதல் கூடாது. மிளகு சேர்ப்பதும் நன்மையைத் தரும். இரவு சாதம் சாப்பிடுதல் கூடாது
என்றெல்லாம் தர்ப்பணம் செய்யவேண்டும்?
ஒரு ஆண்டில் தாய் தந்தையர் இறந்த நாட்களில், மேலும், ஒவ்வொரு தமிழ் திங்களின் முதல் நாள், ஒவ்வொரு கதிரவமறைப்பு மற்றும் நிலவுமறைப்பு நாட்களில், ஒவ்வொரு திங்களின் புது நிலவு நாள் செய்யலாம்.