மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தொழில் மற்றும் வருவாய் ஆகியவற்றிற்கான தலைவர் மற்றும் பொறுப்பாளர் வியாழன் ஆகும்.
வியாழன் யாருடைய ஜாதக அமைப்பில் வலுப்பெற்றிருந்தாலும், அந்த ஜாதகக்காரர் செல்வச் செழிப்புடன் உயர்பதவிகளில், சிறப்பான வாழ்வை பெற்றிருப்பார் என ஆருடம் எடுத்துரைக்கிறது.
எனவே மிதுனம் லக்ன அமைப்பு கொண்ட ஜாதகருக்கு, வியாழன் ஆட்சி அல்லது வலுப்பெற்று இருந்தால், அவர் செல்வம், செல்வாக்கு, உயர்பதவிகளில் இருக்கக்கூடிய அமைப்பு, பிறருக்கு அறிவுரை சொல்லத்தக்க பதவிகளில் இருப்பது, எடுக்கின்ற செயல்களில் கைதேர்ந்தவர்களாக விளங்கக்கூடிய அமைப்பு என பல சிறப்புகள் கிடைக்கும்.
இந்த லக்னக்காரர்கள் பொதுவாக வங்கி அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் ஆகிய துறைகளில் பணிபுரிவார்கள். மக்களுக்கு தொண்டு செய்ய தக்க மாவட்ட ஆட்சியர் - சார் ஆட்சியர் - வட்டாட்சியர் போன்ற பொறுப்பான பதவிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
வியாழன் இந்த லக்கினக்காரர்களுக்கு வருவாய்க்கான உரிமையாளர் என்றாலும் மிதுன லக்கின அமைப்பு கொண்டவர்களுக்கு, இதே வியாழன், பாதிப்புகளையும் தரக்கூடியவராக பலநேரங்களில் திகழ்வார். ஆகவே, இந்த லக்னக்காரர்கள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பொதுவாக இந்த லக்கினகாரர்களுக்கு கூட்டுத்தொழில் அமைப்பு பொருந்தாது. அப்படி அமைந்தாலும் அது தோல்வியில்தான் முடியும்.
வியாழன், ஞாயிறு அல்லது செவ்வாய் ஆகிய கோள்களுடன் சேர்ந்து அமைப்பு பெற்றால் அல்லது, ஞாயிறு அல்லது செவ்வாய் பத்தாம் வீட்டில் வலுப்பெற்று இருந்தால் அத்தகைய ஜாதகக்காரர்கள், அரசு பதவிகளில் உயர்வான பொறுப்பை கொண்டு இருப்பர்.
ஞாயிறு அல்லது செவ்வாயுடன், அறிவன் (புதன்) சேர்ந்து இருந்தால், ஜாதகக்காரர் கணினித்துறையில் சிறந்தோங்கி இருப்பார்.
வியாழன் செவ்வாயுடன் சேர்ந்து வலுப்பெற்று இருந்தால், அந்த ஜாதகக்காரர் நிலம், கட்டிடத் தொழில் ஆகியவற்றில் பெரும் செல்வம் ஈட்டுவான். இவர்கள், அரசியல் ஈடுபாட்டால், செல்வாக்கு மிக்க பதவிகளில் இருப்பர்.
வியாழன் நிலவுடன் சேர்க்கை பெற்றால், அந்த ஜாதகக்காரர்கள் நீர் அல்லது உணவு அல்லது முகவர் அல்லது தரகர் போன்ற தொழில்களில் பெரும் செல்வம் ஈட்டுவர்.
வியாழன் அறிவன் கோளுடன் சேர்க்கைப் பெற்று வலுவாக இருந்தால் சிறந்த அறிவாற்றல் கொண்டவராக, பள்ளி - கல்லூரிகளில் உயர்வான பொறுப்புகளில், பிறரை வழிநடத்தக் கூடிய, உயர்ந்த திறமை கொண்டவர்களாக விளங்குவர்.
வியாழன் நிலவுடன் இணைந்து, அறிவன் அல்லது செவ்வாய் சேர்ந்து இருந்தால், அந்த ஜாதகக்காரர், கடல் சார்ந்த துறைகளில் சிறந்து விளங்குவார். இவர்கள் பெரிய அளவிலான உணவகங்கள் தொடர்பான பணிகளில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது.
வியாழன் வெள்ளியுடன் சேர்ந்து, பத்தாம் வீட்டில் இருந்தால், அந்த ஜாதகக்காரர்கள் ஆடை அணிகலன் போன்ற கலை தொடர்பான பொருட்களை விற்பனை அல்லது உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபடுவர். இவர்கள் பொதுவாக, பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள் தொடர்பான தொழிலில் ஈடுபடுவர்.
வியாழன் வெள்ளியுடன் சேர்ந்து அதனுடன் காரியும் (சனி) இணைந்தால் அவர்கள், வண்டி வாங்கி விற்பது அல்லது போக்குவரத்து தொடர்புடைய தொழில் செய்வர். சிலர் கடல்கடந்த வெளிநாட்டு தொடர்பு ஏற்படுத்தி அதில் பெரும் செல்வம் ஈட்டுவர்.
வியாழன் வெள்ளியுடன் சேர்ந்து, அவற்றுடன் அறிவன் அல்லது நிலவு சேர்க்கை பெற்றால். அந்த ஜாதகக்காரர், கலைத்துறை, திரைத்துறை, திரைத்துறை தொடர்பான உட்பிரிவு துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். இவர்கள் பெரிய அளவிலான கட்டிடம் கட்டி விற்பனை செய்யும் தொழிலும் மேற்கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது.
வியாழனுடன், செவ்வாய் மற்றும் ராகு அல்லது கேது சேர்க்கை அமையப் பெற்றால் புதிய தொழில்நுட்பம் தொடர்பான பணிகளை மேற்கொள்வர். இவர்கள் தொலைத்தொடர்புத்துறை, பொறியியல் துறை, மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி, வேதியல் துறை, போன்றவற்றில் ஈடுபடுவர்.
இந்த லக்னகாரர்களுக்கு, வியாழன் வலு குறைந்து, அதனுடன் காரி அல்லது ராகு போன்ற தீய கோள்கள் சேர்க்கை பெற்றால், நிலையற்ற வருவாய் கொண்டவர்களாக வாழ நேரிடும்.
காரி அல்லது ராகு பத்தாம் வீட்டில் இருந்து, அவை நல்ல கோள்களின் பார்வையின்றி இருந்தால், அந்த ஜாதகக்காரர் வாழ்நாள் முழுவதும் சட்ட சிக்கல்களில் சிக்கி அல்லல் படுவர்.