தமிழ்நாட்டை பொறுத்தவரை மூதாதையரை அடக்கம் செய்வது அல்லது எரியூட்டுவது பொதுவாக உள்ள இடுகாடு அல்லது சுடுகாடு பகுதியில். நில புலன்களை பெரிய அளவில் வைத்திருப்பவர்கள் அவரவர் உரிமையாக உள்ள நிலத்தில் தங்கள் மூதாதையர்களை அடக்கம் செய்கிறார்கள்.
மேற்கூறியவை பொதுவாக இருந்தாலும், வளர்ச்சி கண்டு வரும் பேரூர் பகுதிகளில், பொதுவான இடுகாடு அல்லது சுடுகாடு பகுதிகளை கூட ஆக்கிரமிப்பாளர்கள், ஆக்கிரமித்து அதை வீட்டு மனைகளாக பிரித்து விற்று விடுகின்றன.
ஒன்றும் தெரியாமல் நம்மில் பலர் அவற்றில் வீட்டைக் கட்டி விடுகிறோம். இப்படியான இடத்தில் வீடு கட்டினால் அதனால் பழிப்பு ஏற்படுமா? அதாவது வாழ்க்கையில் தடங்கல்கள் ஏற்படுமா? வடமொழிச் சொல்லில் சொல்வதானால் தோஷம் ஏற்படுமா?
பழிப்பு அல்லது பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் சில வாஸ்து வல்லுநர்கள். அதற்கு சல்லிய தோஷம் என்று பெயர் வைத்துள்ளனர். இது ஜாதக தோஷம் இல்லை. வாஸ்து முறைகளை கணிப்பவர்கள் இப்படியான ஒரு தோஷத்திற்கு வழி இருக்கிறது என்கின்றனர்.
இந்த வாஸ்து வல்லுனர்களை பொருத்தவரை, மனிதர்களுக்கான இடுகாடு சுடுகாடு மட்டும் இந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று வரைமுறை இல்லையாம். புதையுண்ட மற்ற விலங்குகளின், பறவைகளின் உடல் கூறுகள் கூட இந்தச் சல்லிய தோஷத்தை ஏற்படுத்தும் என்று அச்சுறுத்துகின்றனர்.
சல்லிய தோஷம் எவ்வகை பாதிப்புகளை ஏற்படும்?
சல்லிய தோஷம் ஏற்படுத்தும் இடத்தில் வீடு கட்ட துவங்கும் பொழுது, பணம் வந்து சேர்வதில் தடை ஏற்படும். வீட்டை முழுமையாக கட்டி முடிக்க இயலாது. மரணம் போன்ற எதிர்மறை செலவுகள் வரும். உடல் நலக்குறைவு ஏற்படும்.
இதை ஆருட வல்லுனர்களாலோ அல்லது ஜாதக முறைகளை கணிப்பவர்களாலோ கண்டறிய இயலாது. பிரசன்னம் பார்ப்பவர்கள் அல்லது வாஸ்து பார்ப்பவர்கள் மட்டுமே இந்த சல்லிய தோஷம் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து கண்டறிந்து சொல்ல முடியும்.
ஜாதகத்தில் மனை தோஷம்!
ஜாதகத்தால் சல்லிய தோஷம் ஏற்படாது என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். ஆனால் கோள்களின் இருப்பிடத்தை பொறுத்து ஜாதகத்தின் மூலமாக மனை தோஷம் ஏற்படலாம். மனை தோஷம் எப்படி ஏற்படுகிறது என பார்க்கலாம்.
நான்கில் உள்ள அவயோகர் அல்லது நான்காம் பாவதிபதியுடன் கேது மற்றும் அங்குள்ள அசுப கோள்கள் தொடர்பு பெற்றால் மனைத்தோஷத்தை ஏற்படுத்தும். ஜாதகரை வீட்டில் தங்கவிடாது மற்றும் உடல் நலத்தை கெடுத்துவிடும்.
நிலம் விற்றவனின் மனக்குமுறல்!
நிலம் விற்றவன் மனக்குமுறல் கூட ஒருவகை பழிப்பு (சாபம்) ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக உழவு செய்பவன் தனக்கு சோறு போடும் நிலத்தை அடகு வைப்பது, பின்பு மனவருத்தத்தோடு விற்கும் பொழுது அவர்களின் மனக்குமுறலைக் கூட நிலம் வாங்கியவர்களை பாதிக்கக்கூடும். நிலம் வாங்குபவரும், நிலத்தை விற்பவரும் மகிழ்ச்சியாக செயல்முறையை செய்யவேண்டும். அப்பொழுது ஒருவித நேர்மறை அதிர்வு ஆற்றல் அந்த நிலத்தில் நிலவும்.
சல்லிய தோஷம் ஏற்படாமல் தடுக்கும் முறை என்ன?
வீடு கட்டும் நிலத்தை மூன்று அடி ஆழத்திற்கு தோண்டி, பழைய மண்ணை முழுவதுமாக அப்புறப்படுத்தி விட்டு, புதிய மண் கொண்டு நிரப்பி வீடு கட்ட துவங்குவது இந்த தோஷத்திற்கு முழுமையான விலக்கு தரும் என்கின்றனர் பிரசன்னம் மற்றும் வாஸ்து வல்லுநர்கள்.
மேற்சொன்ன முறையை பின்பற்றாமல் வீட்டை கட்டி விட்டால், அதன் பின்பு பாதிப்புகளை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது என்ற நிலையில், 5 சைவ பிள்ளைமார் தம்பதிகளை பாதிப்புள்ள வீட்டிற்கு ஒன்றாக அழைத்து, அவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களிடம் வீட்டின் உரிமையாளர் தம்பதியராய் ஆசி பெற்றால், இந்த தோஷத்தில் இருந்து விடுபடலாம்.
வீட்டின் வாயு மூலையில் காய்கறி அல்லது பழங்களை பலனாக கொடுக்கத்தக்க மரம் அல்லது செடிகளை அமைக்க வேண்டும். வாயு மூலையில், முளைகட்டிய கீரை வகை பயிர்களை வளர்ந்து, அதை வீட்டில் உள்ள அனைவரும், 90 நாட்களுக்கு தொடர்ந்து காலை நேர உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவற்றைப் பின்பற்றினால் வல்லுனர்கள் உதவியின்றி எளிதாக தோஷங்களை நீக்கலாம்.