ஆரூடத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒன்பது கோள்களும் தமக்கென ஒவ்வொரு தன்மையை கொண்டிருக்கும், அதற்கு ஏற்ப அவை குறிப்பிட்ட ராசி வீடுகளில் வெவ்வேறான திறன்களை ஜாதகரின் மீது வெளிப்படுத்தும் என்பன போன்ற பலவற்றை கற்றறிந்தோம்.
இங்கே நாம் எந்தெந்த கோள்கள் நற்பயன் தருவதாக இருக்கின்றன, எவை தீய பயன்களை தரும் தன்மையைக் கொண்டது என்பது குறித்து அறியலாம்.
ஆருடம் ஒன்பது கோள்களையும் அவற்றின் தன்மைக்கு ஏற்ப இரு வகையாக பிரிக்கிறது. அதாவது, நன்மை செய்யும் கோள்கள் என ஒரு குழுவாகவும், தீயவற்றை செய்யும் கோள்கள் ஒரு குழுவாகவும் பிரித்து பட்டியலிடுகிறது.
நன்மை செய்யும் கோள்களை வடமொழியில் "சுப கிரகங்கள்" அல்லது "சௌமிய கிரகங்கள்" என்று குறிப்பிடுகின்றனர்.
தீயவற்றை செய்யும் கோள்களை வடமொழியில் "பாப கிரகங்கள்" அல்லது "குரூர கிரகங்கள்" என்று குறிப்பிடுகின்றனர்.
எந்த கோள்கள் நன்மை செய்யும் கோள்களின் பட்டியலில் உள்ளன என்பது பார்க்கலாம்:
வளர்பிறை திங்கள், அறிவன் (புத), வியாழன், வெள்ளி ஆகிய நான்கும் நன்மைசெய்யும் கோள்களாக ஆருடம் கணிக்கிறது.
எந்த கோள்கள் தீயவற்றை செய்யும் கோள்களின் பட்டியலில் உள்ளன என்பது பார்க்கலாம்:
ஞாயிறு, தேய்பிறை திங்கள், செவ்வாய், காரி (சனி), ராகு, கேது ஆகிய ஆறும் தீயவை செய்யும் கோள்களாக ஆருடம் கணிக்கிறது.
மேலே குறிப்பிட்டது, திங்களுக்கு மட்டும் இருவேறு தன்மைகள் இருக்கிறது. அதாவது வளர்பிறை திங்கள் நற்பயனை, தேய்பிறை திங்கள் தீய பயன்களையும் தரும் என ஆருடம் கணித்துள்ளது.