ஒரு மனிதன் முழு வாழ் நாளும் வாழ்ந்தான் என்றால் அவனது ஆயுள் 120 ஆண்டுகள் என ஆருடம் கணிக்கிறது.
இந்த 120 ஆண்டுகளை ஆருடக் கோள்கள் ஒவ்வொன்றும் தமக்கென ஒரு நேர அளவை எடுத்துக்கொள்கிறது.
அதாவது 120 ஆண்டுகளில்
7 ஆண்டுகள் கேது
20 ஆண்டுகள் வெள்ளி (சுக்கிரன்)
6 ஆண்டுகள் ஞாயிறு
10 ஆண்டுகள் நிலவு
7 ஆண்டுகள் செவ்வாய்
18 ஆண்டுகள் ராகு
16 ஆண்டுகள் வியாழன் (குரு)
19 ஆண்டுகள் காரி (சனி)
17 ஆண்டுகள் அறிவன் (புதன்)
என தமக்குள் 9 ஆருட கோள்களும் பங்கிட்டுக்கொள்கின்றன.
தசை எப்படி கணக்கிடுவது?
பிறப்பு சாதகத்தை பார்த்தால், அதன் நாட்கள் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும்.
எடுத்துக்காட்டாக 17.07.1968 அன்று பிற்பகல் 2 மணிக்கு ஒருவர் பிறந்தார் என எடுத்துக்கொள்வோம்.
அவருக்கான சாதகத்தில் தசை இருப்பு கேது 6 ஆண்டுகள், 5 திங்கள், 8 நாட்கள் என்று இருக்கும்.
அதாவது அவருக்கு அந்த நாட்கள் அளவில் கேது தசை நடக்கும்.
அப்படியானால், 17.07.1968 + 6 ஆண்டுகள் + 5 திங்கள்கள் + 8 நாட்கள் என 25.12.1974 வரை கேது தசை நடக்கும்.
அதன் பின் வெள்ளி 20 ஆண்டுகள் என்றால் 24.12.1994 வரை. அதன் பின் ஞாயிறு என்று ஒவ்வொன்றாக தசை வந்து செல்லும். அப்படி கணக்கிட்டால் அவருக்கு 24.12.2035 வரை இராகு தசை நடைபெறும்.
இன்று 05 .செப்டம்பர் 2019 காலை 3 மணிக்கு மதுரையில் பிறந்த குழந்தைக்கு வியாழன் இருப்பு 8 திங்கள்கள் 24 நாட்கள் என்று வரும். அப்படியானால் அந்த குழந்தைக்கு அடுத்து காரி தசை 29 சனவரி 2020 ல் துவங்கும்.
ஏன் இந்த முதல் தசையில் மட்டும் நேரம் குறைபடுகிறது?
ஒருவருக்கும் துவங்கும் முதல் தசை முழு நேர அளவில் இல்லை என்பதை கவனித்திருப்பீர்கள். முதலில் சொன்ன எடுத்திஉக்காட்டிற்கு கேது 6 ஆண்டுகள், 5 திங்கள், 8 நாட்கள் என்று வந்தது. அடுத்த எடுத்துக்காட்டிற்கு வியாழன் இருப்பு 8 திங்கள்கள் 24 நாட்கள் என்று வந்தது.
அதாவது கிருத்திகை விண்மீனில் ஒருவர் பிறந்தர் என்றால் அவருக்கு ஞாயிறு தசை 6 ஆண்டுகள். அந்த 6 ஆண்டுகளும் அவருக்கு முழுவதுமாக இருக்காது.
ஏனெனில், கிருத்திகை விண்மீனில் பிறப்பவர் அந்த விண்மீன் துவங்கிய விநாடியிலேயே பிறந்திருக்க வாய்ப்பு மிக குறைவு. அப்படி அவர் பிறந்தால் அவர்க்கு 6 ஆண்டுகள் முழுமையாக அந்த தசை நடைபெரும்.
கிருத்திகை 60 நாழிகை உள்ளது என்று வைத்துக்கொள்வோம். ஒருவர் 20 நாழிகை கழித்து பிறந்தார் என்றால், அவருக்கு 1/3 பங்கு இல்லாமல் போகிறது. மீதம் அவருக்கு 2/3 மட்டுமே உள்ளது.
அதனால் அந்த 6 ஆண்டுகளில் 1/3 பங்கு போக மீதம் 4 ஆண்டுகள் மட்டுமே இருக்கும்.
எதை வைத்து தசை முடிவு செய்யப்படுகிறது?
பிறந்த விண்மீனை பொறுத்து தசை முடிவாகிறது. அதாவது முதல் தசை. கீழ் உள்ள அட்டவனையின் படி பார்த்தால், ஒவ்வொறு விண்மீனும் தனக்கு 10 ஆவது நிலையில் உள்ள விண்மீனை அதே தசையில் கொண்டிருக்கும்.
கேது : அசுவினி, மகம், மூலம்
வெள்ளி: பரணி, பூரம், பூராடம்
ஞாயிறு: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்
நிலவு: ரோகிணி, அசுதம், திருவோணம்
செவ்வாய்: மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
இராகு: திருவாதிரை, சுவாதி, சதயம்
வியாழன்: புனர்பூசனம், விசாகம், பூரட்டாது
காரி: பூசம், அனுசம், உத்திரட்டாதி
அறிவன்: ஆயில்யம், கேட்டை, ரேவதி