கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அவர்களுக்கான வருவாய் மற்றும் தொழிலுக்கான உரிமையாளர் மட்டுமல்லாது, பட்டாம் வீட்டிற்கான உரிமையாளராகவும் அறிவன் (புதன்) விளங்குகிறார். இத்தகைய அமைப்பு, சிறந்த அமைப்பாகும்.
அதனால்தான், கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள், பொதுவாகவே சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாக விளங்குகிறார்கள். எந்த செயலை செய்வதற்கு முன்பும் சிந்தித்து திட்டமிட்டு அதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அறிவன் ஆட்சி அல்லது உச்சம்பெற்று தனது நட்பு கோள்களான வெள்ளி, காரி (சனி) போன்ற கோள்களின் சேர்க்கை பெற்று, வியாழன் போன்ற நற்பயன் பயக்கும் கோள்களின் பார்வை பெற்றால், இத்தகைய ஜாதக அமைப்பு கொண்டோர் சமூகத்தில் சிறப்பான உயர் நிலையினை அடைவார்கள். இவர்களுக்கு பிறரை ஆட்சி செய்யக்கூடிய பதவிகள் தாமாக வந்து சேரும்.
அறிவன் வலுப்பெறுவது மட்டுமின்றி, அதனுடன் செவ்வாய், ஞாயிறு இவற்றின் சேர்க்கை உண்டானால், அந்த ஜாதகக்காரர் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் உயர்வான பதவிகளை அடையும் யோகம் கிடைக்கும். செவ்வாய், ஞாயிறு ஆகியவற்றுடன், காரியும் வலுப்பெற்று அமைந்து விடுமாயின், அரசியல் செல்வாக்கு மிக்க நபராக ஜாதகக்காரர் திகழ்வார். இத்தகைய ஜாதக அமைப்புடன், திரிகோணங்களில் ஞாயிறு சேர்க்கை பெற்று, நிலவும் வலுவாக அமைந்து, வியாழனின் பார்வையும் செய்தால் அரசு அல்லது அரசு சார்ந்த பதவிகள் தாமாக வீடு தேடி வரும். இவர்களின் செல்வச் செழிப்பிற்கு குறைவே இருக்காது.
அறிவன், வெள்ளி காரி போன்ற அதன் நட்பு கோள்களின் சேர்க்கைப் பெற்று வலுவாக அமையப் பெற்றால் தாமாக தொழில் துவங்கி, அதில் வெற்றி காண்பார்கள்.
அறிவன், வெள்ளி - நிலவு ஆகியவற்றின் சேர்க்கை உண்டாகி, 9 அல்லது 12-ல் ராகு அமையப் பெற்றால், அந்த ஜாதகர் கடல் கடந்து வெளிநாடு சென்று வருவாய் ஈட்டும் யோகம் கிடைக்கும்.
அறிவன் உடன் நிலவு சேர்ந்து அதனுடன் வெள்ளியும் சேர்ந்தால் வேளாண் தொழிலில் ஈடுபட்டு பெரிய அளவிலான செல்வங்கள் ஈட்டுவார். இதேபோன்று, அறிவன் உடன் செவ்வாய் சேர்க்கை பெற்றால் அந்த ஜாதகக்காரர் நிலம் - வேளாண்மை தொடர்புடைய பணிகள் செய்யும் அமைப்பு கிடைக்கும்.
அறிவன் வெள்ளியுடன் சேர்க்கைப் பெற்று வலுப் பெற்றிருந்தால் அந்த ஜாதககாரர் கதை - இலக்கியம் - ஆடல் - பாடல் - திரை - இசை ஆகிய துறைகளில் புகழ்பெற்று திகழ்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அறிவன் வெள்ளியின் சேர்க்கைப் பெற்று, அவை திரிகோணங்களில் அமைந்து, அவற்றின்மீது வியாழனின் பார்வையும் கிடைத்தால், அத்தகைய ஜாதகக்காரர் பெண்கள் வழியில் அல்லது பெண்கள் தொடர்பான பொருட்களை உற்பத்தி அல்லது விற்பனை செய்யும் தொழில்களில் ஈடுபட்டு செல்வம் ஈட்டுவார். இதே அமைப்பு கொண்ட சிலர் கணினி துறைகளில் ஈடுபடுவர்.
அறிவன் தனித்து வலுப்பெற்று, வியாழன் போன்ற நற்பயன் பயக்கும் கோள்களின் பார்வை பெற்றால், ஜாதகக்காரர், கற்பித்தல் - ஆசிரியர் - பேராசிரியர் பணி, பதிப்பகம், ஊடகத்துறை, வழக்கறிஞர், மேடைப் பேச்சாளர், அரசியல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு செல்வம் ஈட்டுவர்.
அறிவன் தனது நட்பு கோள்களான வெள்ளி - காரி ஆகியவற்றுடன் சேர்க்கை பெறுவதும், வெள்ளி -காரி ஆகியவற்றின் வீடுகளில் அமைவதும், கல்விக்கு தொடர்பில்லாத துறைகளில் முன்னேற்றத்தைக் கொடுக்கும் அமைப்பாகும்.
காரி, அறிவன் உடன் சேர்க்கை பெற்று, வலுவிழந்து இருந்தால் அத்தகைய ஜாதக அமைப்பு கொண்டோர் பிறருக்கு கீழ் பணிபுரியும் அமைப்பு கிடைக்கும்.
காரி அல்லது கேது அல்லது ராகுவுடன், வெள்ளி சேர்க்கை பெற்றால் அந்த ஜாதகக்காரர் சமூகத்தால் கீழ் நிலையாக கருதப்படும் வேலைகளைச் செய்யக்கூடிய அமைப்பு கிடைக்கும்.
அறிவனின் ஏழாவது வீட்டில், காரி - செவ்வாய் - ராகு - கேது போன்ற தீய கோள்கள் இருந்தால், அந்த ஜாதகக்காரர், பிற ஜாதக அமைப்புகள் கொண்டு உயர்வான கல்வி, கடுமையாக உழைக்கும் திறன், சிறந்த சிந்திக்கும் ஆற்றல் என எதைப் பெற்றிருந்தாலும், அத்தகைய திறன்களின் பயனின்றி, வாழ்வின் மேன்மை அடைய இயலாத நிலை ஏற்படும்.
அறிவனுக்கு இருபுறங்களிலும் தீய கோள்களின் அமைப்பு இருந்தால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுவதில் தடைகள் ஏற்படும்.
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஏழாமிடம் பாதிப்பை ஏற்படுத்தும் இடம் என்பதால், இவர்கள் முடிந்தவரை கூட்டுத் தொழில் செய்வதைத் தவிர்த்து, எதிலும் தனித்து செயல்பட்டு, பிறரை சார்ந்திராத பணிகளை மேற்கொள்வது நற்பயன் விளைவிக்கும்.