மகரம் லக்கினத்தில் பிறந்தவர்களின் 10ம் வீட்டின் உரிமையாளர் வெள்ளி, அவரே 5ம் வீட்டின் உரிமையாளராகவும், மேலும் லக்கினத்தின் உரிமையாளரான காரிக்கு (சனி) நட்பு கோளாக விளங்குவது ஒரு தலைசிறந்த அமைப்பாகும்.
10ம் வீட்டின் உரிமையாளரான வெள்ளி அதன் நட்பு கோள்களான அறிவன் (புதன்), காரி (சனி) ஆகியவற்றுடன் சேர்க்கை பெற்று, அவற்றுடன் ராகுவும் இணைந்து இருந்தால், ஜாதகருக்கு செல்வச்செழிப்பு, புகழ், பதவி என எதற்கும் குறைவின்றி, எல்லாம் உயர்வான நிலையில் அமையும்.
அறிவன், வெள்ளி, காரி ஆகியவற்றின் சேர்க்கை அல்லது அறிவன், வெள்ளி ஆகியவை இணைந்து வியாழனின் பார்வை கிடைத்து, அறிவன், வெள்ளி, காரி போன்ற பொருள்களில் ஏதாவது ஒரு கோளின் தசை நடந்தால், ஜாதகர் தாமாக தொழில் செய்து பெரும் செல்வந்தராக வாழ்வார்.
ஞாயிறு மகர லக்னத்திற்கு பத்தாம் வீடான துலாமில் இழிவு நிலை (நீசம்) கொள்வதால், மகரம் லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாக, அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் பணி புரியாமல் இருத்தல் சிறப்பு. இவர்கள் தனியார் துறைகள் அல்லது தாமாக தொழில் துவங்குவது ஆகியவற்றின் மூலம் செல்வச் செழிப்பை அடைவதற்கான வாய்ப்புகள் பெருவாரியாக உள்ளது.
10ல் ஞாயிறு இழிவு நிலை பெற்றாலும், அதனுடன் வெள்ளி ஆட்சிப் பெற்று அமைந்து இருக்குமேயானால் ஜாதகருக்கு நீச்சபங்க ராஜயோகம் கிடைக்கும். மகரம் லக்னத்தில் பிறந்து, இந்த யோகம் கொண்டவர்கள், அரசு தொடர்பானவற்றின் மூலம், ஓரளவிற்கேனும் வருவாய் ஈட்டுவர்.
ஞாயிறு, செவ்வாய் சேர்க்கைப் பெற்று, அவற்றுடன் வெள்ளி 10ல் இருந்தால் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை கிடைக்க வாய்ப்புகள் அமையும்.
அறிவன், வெள்ளி, காரி ஆகியவை சேர்க்கை பெற்று 10ல் அமைந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களில் ஜாதகர் ஈடுபட்டு செல்வச் செழிப்பில் மிதப்பார்.
நிலவு வெள்ளியுடன் சேர்க்கை பெற்றால், கூட்டுத் தொழில், கலை, இசை, திரை துறை போன்றவற்றின் மூலம் வருவாய் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும்.
நிலவு வெள்ளியுடனும், அறிவன் வியாழனுடனும் சேர்க்கைப் பெற்றால், வெளிநாடுகளுடன் தொடர்புகொண்டு ஜாதகர் தொழில் புரிவார்.
வெள்ளி அறிவனுடன் சேர்க்கை பெற்றால், கணிதம், கணினி தொடர்புடைய துறைகளில் அல்லது எழுத்துத் துறை போன்றவற்றில் வருவாய் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும்.
வெள்ளி, வியாழன் போன்ற கோள்களுடன் சேர்க்கை பெற்றால், பிறருக்கு அறிவுரை சொல்லத்தக்க ஆசிரியர், பேராசிரியர், வழக்கறிஞர், பட்டய கணக்காளர் போன்ற உயர்வான பதவிகள் அமையும்.
வெள்ளி வலுவாக அமையப் பெற்றால், பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள் தொடர்பான தொழில் செய்து ஜாதகர் வருவாய் ஈட்டுவார்.
வெள்ளி வலுவிழந்து, காரி - ராகு போன்ற கோள்கள் எதனுடனாவது சேர்க்கை பெற்றால், அதிலும் நற்பயன் பயக்கும் கோள்களின் பார்வை கிடைக்க வில்லை என்றால் சட்டத்திற்கு எதிரான தொழில் செய்ய நேரிடும்.
வெள்ளி வலுவிழந்து, செவ்வாய் - ராகு - கேது போன்ற கோள்களின் சேர்க்கை பெற்றால் அடிமைத்தொழில் செய்யும் நிலை ஏற்படும்.
வெள்ளி, செவ்வாய் - ராகு - கேது ஆகியவற்றின் சேர்க்கை பெற்றால் தீய நட்பு கிடைக்கப்பெற்று பல இழப்புகளை சந்திக்க நேரிடும்.
10ல் தீய கோள்கள் அமைந்தால், அதிலும் நற் கோள்களின் பார்வையின்றி இருந்தால் தீய வழிகளில் ஜாதகர் வாழக்கூடிய நிலை ஏற்படும்.