ஆருடம் கோள்கள் குறிப்பிட்ட ராசி வீடு அல்லது வீடுகளை தமது உரிமை வீடாக கொண்டு அவற்றை ஆளும் (ஆட்சி) என்பதை அறிந்தோம். அவை சில வீடு அல்லது வீடுகளை உயர்நிலை (உச்ச) வீடுகளாக கொண்டு தமது ஆளும் வீடுகளில் இருக்கும் தன்மையை காட்டிலும் 125% கூடுதலாக தனது திறனை வெளிப்படுத்தும் என்பதையும் கற்றோம். சில ராசி வீடு அல்லது வீடுகளில் கோள்கள் வீட்டில் இருக்கும் பொழுது அவை எவ்வித திறனையும் வெளிப்படுத்தாமல் நடுநிலை வகிக்கும் என்பதை அறிந்தோம். தொடர்ந்து, கோள்கள் சில வீடு அல்லது வீடுகளை நட்பு வீடுகளாக கொண்டு அதற்கு ஒப்ப பயன்தரும் என்பதையும் தெரிந்துகொண்டோம். இப்பொழுது, கோள்கள் எந்தெந்த ராசி வீடுகளில் இருந்தால் அவை, அவற்றிற்கு பகையான வீடுகள் என்பதை கற்கலாம்.
தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிகளை தவிர்த்து மற்ற 10 ராசி வீடுகளும் சில குறிப்பிட்ட கோள்களுக்கு பகை வீடுகளாக அமைகின்றன. ராகு கேது ஆகிய நிழல் கோள்கள் உள்பட 8 ஆருடகோள்களுக்கும் பகை வீடு என்று ஒன்று உண்டு. 8 வீடுகள் என்று நாம் இங்கே குறிப்பிடுவது எதனால் என்றால், நிலவிற்கு (திங்கள்) எந்த ராசி வீடும் பகை வீடு இல்லை.
எந்தெந்த கோள்களுக்கு எந்தெந்த ராசி வீடுகள் பகை வீடு என்பது குறித்த பட்டியல்:
ஞாயிறு: ரிஷபம், மகரம், கும்பம்
திங்கள்: எந்த வீடும் பகை வீடு அல்ல
செவ்வாய்: மிதுனம், கன்னி
அறிவன் (புத): கடகம்
வியாழன்: ரிஷபம், மிதுனம், துலாம்
வெள்ளி: கடகம், சிம்மம்
காரி (சனி): கடகம், சிம்மம், விருச்சகம்
ராகு கேது: மேஷம், கடகம், சிம்மம், கும்பம்