தமிழ் ஆண்டில், புரட்டாசி 6-வது திங்களாகும். புரட்டாசி திங்களில், அசைவம் உட்கொள்ளக் கூடாது என்றும், இந்த திங்களில், பெருமாளை வணங்கி, முட்டை முதற்கொண்டு அசைவம் உண்ணாமல் நோன்பு இருக்க வேண்டும் என்று ஆன்மீகவாதிகள் கூறுவர்.
நம் தமிழ் மரபில், பல ஆன்மீக நம்பிக்கைகள், ஆழ்ந்த அறிவியல் பின்புலம் கொண்டவை என்பதை நாம் பல நேரங்களில் உணர்ந்து இருப்போம்.
அறிவியல் பின்னணி:
புரட்டாசி, தமிழ்நாட்டில் மழை பொழிவதற்கான வானிலை கொண்ட திங்கள். மழை நொச-நொச என்று பொழியும் வேளையில், பல வகையான நோய்கள் மனிதர்களை தாக்குகின்றன என்பதை உணர்ந்து இருப்போம். மனிதர்கள் நோய் தாக்குதலுக்கு உட்படும் அதே வேளையில், விலங்குகளும் பறவைகளும் நோய் தாக்குதலை சந்திக்கின்றன.
மழை பொழிந்தாலே, கடல் மீன் வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். ஏனெனில், இயற்கை சீற்றத்தினால் உயிரிழந்த மீன்களை, நாட்கள் பல கடந்து நாம் உண்டோமானால், அது நச்சுத்தன்மை கொண்டதாக அமையலாம்.
அதே போன்றது தான், மழை வானிலை கொண்ட புரட்டாசியில் உயிரினங்கள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது, அவற்றை உண்டால் அது நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம்.
ஆன்மீக சிந்தனை:
ஜோதிட கணக்கீட்டின்படி, புரட்டாசி கன்னி ராசியை முதன்மையாகக் கொண்டது. இந்த திங்களுக்கான கடவுள் பெருமாள். புரட்டாசியின் கோள் அறிவன் (புதன்).
அறிவன் சைவத்தின் அடையாளம். அறிவன் சைவம் என்பதால், பெருமாளை மனதில் நிறுத்தி, சைவ உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என ஆன்மீகப் பெரியவர்கள் சொல்கிறார்கள்.