தமிழில் ஒரு பழமொழி உண்டு. "ஒரு நபரால் செய்ய இயலாத ஒன்றை, ஒரு நாளால் செய்ய இயலும்" என்பதாகும்.
அதாவது, நாம் செய்யக் கூடிய செயலை, அது நல்ல விதமாக நிறைவேற வேண்டுமாயின், நல்ல விண்மீன் நிலை கொண்டிருக்கும் நேரத்தில் செய்தோமேயானால் அது நல்ல பலனை தரும்.
ஐந்திறன் நாள்காட்டியில், மொத்தம் 27 யோகங்கள் வரையறுக்கப்படுகின்றன. அவற்றில், விஷ்கம்பம், அதிகண்டம், சூலம், கண்டம், வியாகதம், வஜ்ரம், வியதீபாதம், பரிகம், வைத்திரு என ஒன்பது யோகங்கள் நல்ல செயல் செய்வதற்கு ஏற்றது அல்ல.
ஐந்திறன் நாட்காட்டிகளில் குறிக்கப்பட்டுள்ள யோகங்கள், விண்மீன் மற்றும் கிழமைகளில் சேர்க்கையால் அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம், பிரபலாரிஷ்டயோகம் என நான்கு வகை யோகங்கள் ஏற்படுகிறது என்பதை அறிவோம்.
ஒரு குறிப்பிட்ட கிழமையில் ஒரு குறிப்பிட்ட விண்மீன் நடப்பில் இருந்தால் ஐந்திறனில் குறிக்கப்படும் யோகம் ஏற்படுகிறது. இதில் அமிர்த யோகம் மற்றும் சித்த யோகம் ஆகியவை சிறந்த நற்பலன்களை தருபவை.
ஆகவே நல்ல செயல்கள் செய்ய இந்த இரு அமிர்தாதி யோகங்கள் கொண்ட நாட்களை பயன்படுத்துவது சிறந்தது.
மரணயோகம் என்ற அந்தச் சொல்லே அது எத்தகைய பலன் தரும் என்பதை விளக்குகிறது. பிரபலா-ரிஷ்ட-யோகம் என்பதிலுள்ள அரிஷ்டம் என்ற சொல் தீங்கை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறது. ஆகவே இந்த இரு யோகம் நடைமுறையில் உள்ள நாட்கள், நற்செயல்கள் செய்வதற்கு ஏற்புடையவை அல்ல.
பொதுவாக பிறந்த லக்னத்தை கொண்டுதான் ஒருவரின் குணத்தை கணக்கிடுவார்கள். ஐந்திறன் யோகங்களை கொண்டும் ஒருவரின் குணத்தை கணிக்கலாம் என்கின்றனர் சில ஆருட வல்லுநர்கள்.
ஒருவரது ஜாதகத்தில் அவர் பிறந்த யோகம் குறிக்கப்பட்டிருக்கும். அதைக் கொண்டு அவர்கள் செய்யும் செயல்கள் எந்த விண்மீன் நேரத்தில் செய்தால் நல்லபடியாக நல்லது நடக்கும் என்பதை கணிக்க இயலும். எனவே, ஒரு ஜாதகத்தில் உள்ள ஐந்திறன் யோகத்தை வைத்து ஒருவருக்கு நன்மை தீமை பயக்கும் விண்மீன் எது என கணித்து விட இயலும்.
நாம் இங்கே விளக்கிக் கூறியது எல்லாம், ஐந்திறன் நாள்காட்டியில் கொடுக்கப்பட்டுள்ள 27 யோகங்கள். இவற்றையும் ஜாதக யோகங்களையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. இவை இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை.