ஜாதகத்தில் கோள்களின் சேர்க்கையைப் பொருத்து, பலவகையான யோகங்கள் கணிக்கப்படுகின்றன. ஜாதகருக்கு பயன் தரத்தக்க யோகங்கள் என சுமார் 250 யோகங்கள் உள்ளன.
ஒரு ஜாதகர், சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட யோக பலன்களை கொண்டிருந்தாலும், சிலர் எவ்வித யோக பயனற்று, ஜாதக யோக பலன்கள் ஏதும் இல்லாதவரை காட்டிலும் கீழான வாழ்க்கையை வாழும் சூழல் ஏற்படுகிறது. இத்தகைய சூழல் எதனால் ஏற்படுகிறது?
சிலர் ஜாதகத்தில் யோகங்கள் வழங்கும் கோள்கள், பாதிப்பு தரக்கூடிய கட்டங்களில் அமைந்திருக்கும். இன்னும் சிலருக்கு, யோகங்கள் பிற ஜாதக நிலைகளால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
எனவே ஜாதகத்தில் யோகங்களைப் கணிக்கும் பொழுது, பாதிப்புகளை ஏற்படுத்தும் பிற நிலைகள் உள்ளனவா என கண்டறிய வேண்டும். அதன் பின்பு தான், யோகம் உள்ளது என கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஜாதக யோகங்களுக்கு எத்தகையச் சூழலில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம்.
யோகத்தை ஏற்படுத்தும் கோள் நீசம், மறைவு அல்லது பகை வீட்டில் இருத்தல், தீங்கான கோள்களின் பார்வை பெறுதல், ஆகியவையால் யோகபலன் பாதிப்படையலாம்.
ராசிக்கட்டத்தில் யோக பலன் தரும் அந்தக் கோளின் நிலையில் ஏற்படும் மாற்றத்தாலும், நவாம்ச கட்டத்தில் உள்ள அமைப்பாலும் யோகங்கள் பாதிப்படையலாம்.
ஜெய்மினி என்கிற முனிவர், யோகங்கள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து கருத்துரைத்துள்ளார். அவரின் கூற்றின்படி, கோள்களின் பாகை வேறுபாட்டாலும், கோள்கள் ராசியில் அமர்ந்த இடத்தையுடைய விண்மீன் பாதிக்கப்படுவதால் இவ்வாறு யோகங்கள் பலன் தராத நிலையில் அமையலாம்.
யோகம் எப்பொழுதும் செல்வச்செழிப்பு தருமா?
ஜாதக யோகங்கள் வாழ்நாள் முழுவதும் செல்வச் செழிப்பையும் பலனையும் தரும் என ஒருவர் நினைத்தால் அது தவறு. ஜாதகத்தில் உள்ள பெரும்பாலான யோகங்கள் தொடர்ந்து பலன் தராது என்பதே உண்மை. இதிலும் விலக்காக, சில யோகங்கள் வாழ்நாள் முழுவதும் வேலை செய்யும்.
பொதுவாக யோகங்கள் எந்த கோள்களின் நிலையால் ஏற்பட்டுள்ளதோ, அந்தக் கோள்களின் தசாபுக்தி நடைபெறும் பொழுது ஜாதகருக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.
மேலும், யோகங்கள் என்பது, ஜாதகத்தில் கோள்களின் நிலையை பொருத்து கணிக்க படுவதால், அத்தகைய கொள்கள் பாதிப்படையாத நிலையில் இருந்தால் நல்ல பலனை தொடர்ந்து தரும்.
கீழ்காணும் விதிகளின் கீழ் யோகம் பாதிப்படையும்:
1. யோகம் தரும் கோள்களுடன் பகைக் கோள்கள் சேர்க்கை.
2. யோகம் தரும் கோள்கள் 6, 8 அல்லது 12 ராசி வீட்டு உரிமையாளர்களுடன் சேர்க்கை.
3. யோகம் தரும் கோள்களின் விண்மீன் உரிமையாளர் ராசிக்கட்டத்தில் 6, 8 அல்லது 12ல் மறைந்தால்
4. யோகம் தரும் கோள்கள் பகை அல்லது நீச்சம் பெற்றால்
ஒரு யோகம் மட்டும் எல்லா சூழலிலும் பயன் தரும்... அது "தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்". உழைத்தால், முயன்றால், உழைப்பிற்கு ஏற்ற பயனும், யோகமும் என்றும் கிடைக்கும்.