ஆருடம் குறித்து படிக்கும் பொழுது, பல நேரங்களில் படிக்க நேரிடும் சொல் "ஆட்சி". ஒரு கோள் ராசி வீட்டை தமதாக்கிக் கொண்டு அதை ஆட்சி செலுத்தும் என்பது ஆருட கணிப்பு ஆகும்.
ஆருடத்தில் மொத்தம் 9 கோள்கள், அதாவது ஞாயிறு, திங்கள் (நிலவு), செவ்வாய், அறிவன் (புத), வியாழன், வெள்ளி, காரி (சனி) என 7 நிலையான கோள்களும், ராகு கேது என மேற்கொண்டு 2 நிழல் கோள்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆருட துவக்க ஊழிகளில், முதலில் குறிப்பிட்ட 7 கோள்கள் மட்டுமே ஆருடம் கணிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்நாட்களில் ராகு - கேது என இரண்டு கோள்கள் மேற்கொண்டு ஆருடம் கணிப்பதில் இணைக்கப்பட்டது.
இன்றைய சூழலில், இந்த ஒன்பது கோள்கள் தவிர்த்து, குளிகன், மாந்தி என பல துணைக்கோள்கள் ஆருடம் கணிப்பதில் பல்வேறு ஆரூட வல்லுநர்களால் தொடர்ந்து இணைக்கப்பட்டு வருகிறது.
ஆரூடத்தை பொறுத்தவரை, நிலையான கோள்களான ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி என 7 கோள்களும், தமக்கு என்று ஒரு ராசி வீட்டை கொண்டிருக்கின்றன.
இதில் கவனிக்க வேண்டியது, ஞாயிறு மற்றும் திங்கள் தவிர்த்த பிற 5 கோள்களும், தங்களுக்கு என இரண்டு ராசி வீடுகளை கொண்டிருக்கும். அதனால்தான் ஞாயிறு மற்றும் திங்கள் ஆகியவற்றை குறிப்பிடும்போது அவற்றை "அரையர் (அரசர்) கோள்கள்" என்று உயர்வாக குறிப்பிடுகிறார்கள்.
ஞாயிறு தனது ஆட்சி வீடாக சிம்மம் ராசியை கொண்டுள்ளது. திங்கள் தனது ஆட்சி வீடான கடகம் ராசியை கொண்டுள்ளது.
செவ்வாய் தமது ஆட்சி வீடுகளாக மேஷம் மற்றும் விருச்சகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அறிவன் தமது ஆட்சி வீடுகளாக மிதுனம் மற்றும் கன்னி ராசிகளை கொண்டுள்ளது. வியாழன் தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிகளை தமது ஆட்சி வீடுகளாக அமைத்துக் கொண்டுள்ளது.
வெள்ளி தமது ஆட்சி வீடுகளாக ரிஷபம் மற்றும் துலாம் ஆகிய ராசிகளை கொண்டுள்ளது. காரி தமது ஆட்சி வீடுகளாக மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளை தமது ஆட்சி வீடுகளாக கொண்டுள்ளது.
இதை எளிதாக புரிந்து கொள்வதற்கு பட்டியலாக பார்க்கலாம்:
ஞாயிறு சிம்மம்
திங்கள் கடகம்
செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சகம்
அறிவன் மிதுனம் மற்றும் கன்னி
வியாழன் தனுசு மற்றும் மீனம்
வெள்ளி ரிஷபம் மற்றும் துலாம்
காரி மகரம் மற்றும் கும்பம்
நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி, ராகு மற்றும் கேது ஆகியவை பின்னாளில் இணைக்கப்பட்ட கோள்கள் என்பதால் அவற்றுக்கு என ராசி வீடுகள் என எதுவும் உரிமை இல்லை. மேலும் ஆருடம் அவற்றைக் குறித்து குறிப்பதே, அவை கற்பனை (நிழல்) கோள்கள் என்று!