ஆருடம் கணிக்க பல்வேறு வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று ஓரை வைத்து குறி பார்ப்பது.
ஜோதிடத்தில் ஞாயிறு மற்றும் நிலவு உள்பட, மொத்தம் ஒன்பது கோள்கள் இருப்பதாக கணக்கிட்டு, அவற்றில் இரண்டு, அதாவது ராகு மற்றும் கேது ஆகியவை மெய்நிகர் கோள்கள் (virtual planets) என்று அழைக்கப்படுகின்றன.
ராகு மற்றும் கேது தவிர்த்த பிற 7 கோள்களும், நாளொன்றுக்கு சுமார் 4 மணி நேரம் தமது கதிர்களை ராசிக்காரர் மீது வீசி, அதற்கு ஏற்ப பலன்கள் கொடுப்பதாக கணிக்கப்படுகிறது. இந்த கதிர்வீச்சு நேரத்தை தான் ஓரை என்று அழைக்கிறார்கள்.
அறிவியல் கணக்கின்படி ஒரு நாள் என்பது, இரவு 12:00:00 மணிக்கு துவங்கி, இரவு 11:59:59 முடிவு பெறும். ஆனால் இந்திய ஆருட கணக்கீட்டின்படி, ஒரு நாள் என்பது ஞாயிறு தோன்றும் நேரத்திலிருந்து, மறுநாள் காலை ஞாயிறு தோன்றும் நேரம் வரை ஒரு நாள் என கணக்கிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, காலை 06:00:00 முதல் மறுநாள் காலை 05:59:59 வரை ஒரு நாள் என கணக்கிடப்படுகிறது.
ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு ஓரை உரிமை என்றும், அந்த நாள் அந்த ஓரையை கொண்டு துவங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஞாயிற்றுக்கிழமை என்றால், அந்த கிழமைக்கான கோள் ஞாயிறு. ஆகவே ஞாயிற்றுக்கிழமை தோறும் ஞாயிறு ஓரையை கொண்டு அந்த நாள் துவங்கும். திங்கள் கிழமை என்றால் நிலவு, செவ்வாய்க்கிழமை என்றால் செவ்வாய், அறிவன் (புதன்) கிழமை என்றால் அறிவன் (புதன்), வியாழக்கிழமை என்றால் வியாழன் (குரு), வெள்ளிக்கிழமை என்றால் வெள்ளி, காரிக் (சனி) கிழமை என்றால் காரி (சனி) என்று அந்தந்த கிழமைக்கு உரித்தான கோள்களை கொண்ட ஓரையை கொண்டு அந்த நாள் துவங்கும்.
எல்லாப் பொருள்களுக்கும் அரசன் ஞாயிறு. அந்த கோள் அரசன் என்று கருதப்படுவதால், அரசு சார்ந்த செயல்கள் அந்த நாளுக்கு ஏற்றது.
அதாவது, வழக்கு தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வது, உயர் பொறுப்பில் உள்ளவர்களை சந்திப்பது, சொத்துக்கள் தொடர்பான முடிவுகள் எடுப்பது, என முயற்சிகளை மேற்கொள்வதற்கு இந்த ஊரை நேரம் சிறந்ததாக இருக்கும்.
அதே வேளையில், ஞாயிறு ஓரை நேரத்தில், புதிய முயற்சிகளுக்கான ஒப்பந்தங்களை முடிவு செய்யக்கூடாது. நல்ல செயல்களை மேற்கொள்ள இந்த ஓரை சிறந்தது அல்ல.
இதை வடமொழியில், சந்திர ஹோரை என்று அழைப்பர். திங்கள் என்றால், அம்மா மற்றும் அன்பிற்கான அடையாளம்.
வளர் பிறை நிலவு, நல்ல ஓரையை ஏற்படுத்தும். இந்த ஓரையில், திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண் பார்த்தல், ஆடை நகைகள் வாங்குதல் , கல்வி கலை கற்றிட துவங்குதல், நெடுந்தொலைவு பயணம் தொடங்குதல், கால்நடைகள் வாங்குதல் ஆகியவை நல்ல பலன்களைத் தரும்.
பொதுவாக இந்த ஓரை நேரத்தில் எல்லா வகை நல்ல செயல்களையும் செய்யலாம்.
பொதுவாக பெண்கள் தொடர்பான எந்த செயலை செய்தாலும் நல்ல பலனையே தரும்.
ஆன்மீக பயணம் மேற்கொள்ளவும், தொழில் ரீதியான பயணங்களை மேற்கொள்ளவும் இந்த வளர் பிறை நிலவு ஓரை நேரம் சிறந்தது.
குருதி, மருத்துவம், புவி, நெருப்பு மற்றும் அதிகாரம் ஆகியவற்றின் வினைகளுக்கு உரிமையாளர் செவ்வாய் என ஆருடம் கூறுகிறது.
பொதுவாகச் சொல்வதானால், செவ்வாய் ஓரையில், நல்ல செயல்களை செய்தல் கூடாது. புதியவற்றை இந்த நாளில் துவங்க கூடாது.
அப்படியானால் எதை இந்த ஓரையில் செய்யலாம் என்றால், போர் தொடுத்தல், போர்க்கருவிகள் செய்தல், வண்டிகளை பழுது நீக்குதல், வீடு மனை நிலம் வாங்குதல், விற்றல், மருந்துண்ணல், ஏரிக்கரை மேம்படுத்துதல் மற்றும் அணை கட்டுதல் செய்யலாம்.
அறிவன் என்றால் அறிவு சார்ந்தவன் என்று பொருள்படுகிறது. ஆகவே இந்த ஓரையில் அறிவுசார்ந்த செயல்களை செய்வது சிறந்தது.
அதாவது, அறிவியல் ஆராய்ச்சிகளை துவக்குவது, ஆருடம் தொடர்பான கட்டளை துவக்குவது, தேர்வு எழுதுவதற்கான வேலைகளைச் செய்வது, பந்தயங்களில் பங்கேற்பது, கடிதத் தொடர்பு மேற்கொள்வது, தொழில்நுட்பம் சார்ந்த புதிய பொருள்களை வாங்குவது மற்றும் புதிய கணக்கு துவங்குவது ஆகியவை செய்யலாம்.
பொதுவாகச் சொல்வதானால், நல்ல செயல்களைச் செய்ய இந்த ஓரை சிறந்தது. மேலும் அறிவை வளர்ப்பதற்கான எல்லா செயல்களையும் இந்த ஓரை நேரத்தில் செய்யலாம்.
ஜோதிடத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒன்பது கோள்களில், நற் பயனைத் தரும் கோள்களில் சிறந்த ஒன்று, வியாழன்.
எல்லாவிதமான நல்ல செயல்களையும் செய்வதற்கு வியாழன் ஓரை மிகச் சிறந்த நேரமாகும். தீய செயல்கள் எதையும் இந்த நேரத்தில் செய்தால் கொடிய கேடான பலன் வந்து சேரும்.
இந்த ஓரை நேரம், திருமணத்திற்கு தாலி தங்கம் வாங்க, திருமணத்திற்கான ஆடை அணிகலன்கள் வாங்க சிறந்த ஓரை நேரமாகும்.
தங்கம் தொடர்பான வேலைகள் மற்றும் புதிய தொழில் துவங்குவதற்கு இது ஏற்ற ஓரை நேரம் ஆகும்.
முதல் இரவு, விதை நடுதல், நாற்று நடுதல், சேமிப்பு கணக்கு துவங்குதல், தொழில் துவங்க பொருள் கொள்முதல் செய்தல் என நற்செயல்கள் செய்ய இந்த ஓரை நேரம் ஏற்றது.
வடமொழியில் வெள்ளி என்ற கோளிற்கு சுக்கிரன் என்று பெயர். ஆருட கணக்கின்படி, ஆண் பெண் உறவு, அழகு, கவர்ச்சி, தூய்மை மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை வெள்ளி கோள் வழி நடத்துகிறது.
ஆகவே இந்த ஓரை நேரம், திருமண ஏற்பாடுகள் மேற்கொள்ள, ஆண் பெண் உறவிற்கு, மருந்து உட்கொள்ள, கடனை மீட்டு பெற, புதிய ஆடை அணிகலன்கள் வாங்க ஏற்ற நேரம் ஆகும்.
பொதுவாக பெண்கள் தொடர்பான செயல்களை மேற்கொள்ள இந்த ஓரை நேரம் சிறந்த நேரமாகும்.
மேலும், நிலத்தில் உழவு துவங்க இந்த ஓரை நேரம் சிறந்த நேரம்.
காரி என்றால் கரியது. வடமொழிச் சொல்லான சனி என்கிற சொல்லிற்கு, கருமை - கரியவன் என்று பொருள்.
இந்த சனி என்கிற காரி, ஆயுள், தொழில் மற்றும் முற்பிறப்பு பலன் ஆகியவற்றின் வழிகாட்டி.
காரி என்றாலே தீங்கு என்கிற மனநிலை, பொதுவாக இருந்தாலும், காரி (சனி) ஓரை நேரத்தில் சில நல்ல செயல்களையும் செய்யலாம்.
இவ்வோரை தீயவற்றில் எல்லாம் தீயது. கொடியவற்றில் எல்லாம் கொடிய நேரத்தை தரும் ஓரை இது. ஆனாலும் நிலம், சொத்து ஆகியவற்றை குறித்து பேசுவதற்கு ஏற்றது.
உழுதல், எருவிடுதல், இரும்பு, மின்சார பொருட்களை வாங்குதல், தோப்பு துரவு (கிணறு) அமைத்தல் ஆகிய செயல்களைச் காரி (சனி) ஓரை நேரத்தில் செய்யலாம்.
பொதுவில் ஞாயிறு - செவ்வாய் - வியாழன் - வெள்ளி ஹோரைகள் மேஷம் இராசிக்காரர்களுக்கு நற்பலன்.
செவ்வாய் மற்றும் வியாழன் ஓரையில் நல்ல மகிழ்வான நிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசு தொடர்பான செயல்கள் செய்தால் நல்லது.
பணம் சார்ந்த செயல்களுக்கு வெள்ளி ஓரையும், கல்வி சார்ந்த செயல்களுக்கு திங்கள் ஓரையும் நன்மை தரும்.
தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - அறிவன் - வியாழன் ஓரைகள் சிறந்தது.
திங்கள், அறிவன், வியாழன் மற்றும் வெள்ளி ஹோரைகள் ரிஷபம் இராசிக்காரர்களுக்கு பெருமளவு நன்மைகளைக் கொடுக்கும்.
வியாழன் மற்றும் வெள்ளி ஓரைகளில் நல்ல நிகழ்ச்சிகளை துவக்குவது நல்ல பலன்களை கொடுக்கும்.
புதிய வீடு - மனை - வண்டி - ஆடை / அணிகலன்கள் வாங்குவதற்கு இவர்கள் வெள்ளி ஓரை நேரத்தை பயன்படுத்துவது நல்லது.
உடல் நலம் தொடர்பான இடர்பாடுகளை நீக்க வெள்ளி ஓரையில் ரிஷபம் இராசிக்காரர்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டால் விரைவில் நோய் குணமடையும்.
திங்கள், அறிவன், வியாழன் மற்றும் வெள்ளி ஹோரைகள் மிதுனம் இராசிக்காரர்களுக்கு நன்மை தரும்.
புதிய முயற்சிகள் - கல்வி - தொழில் - பணியில் சேருதல் அல்லது வின்னப்பித்தல் - வீடு - மனை வாங்குவது போன்றவற்றை அறிவன் ஓரையில் மிதுனம் இராசிக்காரர்கள் செய்தால் நினைப்பது விரைவாக நிறைவேறும்.
மகிழ்வான நிகழ்ச்சிகளை வியாழன் அல்லது வெள்ளி ஓரையில் துவங்கினால் அல்லது செய்வதன் மூலம் நல்லபடியாக முடியும்.
திங்கள், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய ஹோரைகள் கடகம் இராசிக்காரர்களுக்கு சிறந்த நற்பலன்களை கொடுக்கும்.
கல்வி - வேலை - புவி தொடர்பான செயல்களை மற்றும் வண்டி தொடர்பான முயற்சிகள் அனைத்திற்கும் வெள்ளி ஓரையை பயன்படுத்துவதால் நன்மைகள் ஏற்படும்.
மகிழ்வான நிகழ்ச்சிகளுக்கு வியாழன் ஓரை நன்மை தரும்.
ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய ஹோரைகள் சிம்மம் இராசிக்காரர்களுக்கு நற்பலன் கொடுக்கும்.
செவ்வாய் ஹோரையில் சொத்து சார்ந்த செயல்களை செய்வது நல்ல முடிவுகளை எடுக்க உதவும்.
அரசு சார்ந்த செயல்பாடுகளுக்கு ஞாயிறு ஓரை நன்மை கொடுக்கும்.
திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், மற்றும் வெள்ளி ஹோரைகள் கன்னி இராசிக்காரர்களுக்கு நற்பலன் கொடுக்கும்.
வெள்ளி ஹோரையில் சொத்து சார்ந்த முன்னெடுப்புகள் நல்ல முடிவுகளை எடுக்க உதவும்.
அரசு சார்ந்த செயல்களுக்கு அறிவன் ஓரை நன்மை பயக்கும்.
மகிழ்வான நிகழ்ச்சிகளுக்கு வியாழன் ஹோரையையும் - பணம் சார்ந்தவற்றிற்கு வெள்ளி ஹோரையையும் பயன்படுத்துவது நன்மை அளிக்கும்.
செவ்வாய், அறிவன், வியாழன், மற்றும் வெள்ளிம் ஹோரைகள் துலாம் இராசிக்காரர்களுக்கு நற்பலன் கொடுக்கும்.
செவ்வாய் ஹோரையில் நல்ல மகிழ்வான நிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசு சார்ந்த செயல்பாடுகள் செய்தால் நல்லது.
பணம் சார்ந்த செயல்களுக்கு திங்கள் ஓரையும், கல்வி சார்ந்த கற்றல் செயல்பாடுகளுக்கு வெள்ளி ஓரையும் நன்மை தரும்.
திங்கள், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய ஹோரைகள் விருச்சிகம் இராசிக்காரர்களுக்கு சிறந்த நல்ல பலன்களை கொடுக்கும்.
கல்வி, வேலை, மற்றும் புவி தொடர்பான புதிய முயற்சிகள், வண்டி தொடர்பான முயற்சிகள் அனைத்திற்கும் வெள்ளி ஓரையை பயன்படுத்துவதால் நன்மைகள் ஏற்படும்.
மகிழ்வான நிகழ்ச்சிகளுக்கு வியாழன் ஓரை நன்மை தரும்.
ஞாயாயிறு, செவ்வாய், வெயாழன் மற்றும் வெள்ளி ஹோரைகள் தனுசு இராசிக்காரர்களுக்கு நற்பலன் கொடுக்கும்.
வியாழன் ஓரையில் மகிழ்வான நிகழ்ச்சிகள், சொத்து சார்ந்த இனங்கள், அரசு சார்ந்த முன்னெடுப்புகளை செய்தால் நல்ல பலன் தரும்.
பணம் சார்ந்த கொடுக்கல் வாங்கல் போன்ற செயல்களுக்கு வெள்ளி ஓரையும், கல்வி மற்றும் கற்றல் சார்ந்தவைகளுக்கு அறிவன் ஓரையும் நன்மை தரும்.
தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் மற்றும் வியாழன் ஓரைகள் சிறந்தது.
திங்கள், செவ்வாய், அறிவன் மற்றும் வெள்ளி சுக்கிர ஹோரைகள் மகரம் இராசிக்காரர்களுக்கு நற்பலன் கொடுக்கும்.
வெள்ளி ஓரையில் நல்ல மகிழ்வான நிகழ்ச்சிகள், சொத்து சார்ந்த இனங்கள், அரசு சார்ந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டால் சிறப்பான நல்ல பலன் கிடைக்கும்.
பணம் சார்ந்த கொடுக்கல் வாங்கல்களுக்கும் - கல்வி சார்ந்த கற்றல் முன்னெடுப்புகளுக்கும் அறிவன் ஓரையும் நன்மை தரும்.
தொழில் சார்ந்த முயற்சிகளுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளி ஓரைகள் சிறந்தவை.
குடும்பம் மற்றும் குடி சார்ந்தவற்றில் முடிவு எடுப்பதற்கு அறிவன் ஓரை நன்மையைத் தரும்.
திங்கள், செவ்வாய், அறிவன் மற்றும் வெள்ளி ஓரைகள் கும்பம் இராசிக்காரர்களுக்கு நற்பலன் கொடுக்கும்.
வெள்ளி ஓரையில் மகிழ்வான நல்ல நிகழ்ச்சிகள், சொத்து சார்ந்த இனங்கள், அரசு சார்ந்த முன்னெடுப்புகள் செய்தால் நல்ல பலனை தரும்.
பணம் கொடுக்கல் வாங்கள், கல்வி கற்ற்க துவங்குதல் ஆகியவற்றிற்கு அறிவன் ஓரை நன்மை தரும்.
தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் அல்லது சுக்கிர ஓரைகள் சிறந்த பலனை கொடுக்கும்.
குடும்பம் மற்றும் உறவினர் சார்ந்தவற்றில் முடிவு எடுப்பதற்கு அறிவன் ஓரை நன்மையைத் தரும்.
ஞாயிறு, செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி ஹோரைகள் மீனம் இராசிக்காரர்களுக்கு நற்பலன் கொடுக்கும்.
வியாழன் ஓரையில் சிறப்பான நல்ல நிகழ்ச்சிகள், சொத்து வாங்குவது அல்லது விற்பது தொடர்பான முடிவுகள், அரசு சார்ந்த செயல்கள் செய்தால் நல்ல பலன்களை கொடுக்கும்.
பணம் சார்ந்த கொடுக்கல் வாங்கல்களுக்கு வெள்ளி ஓரையும், கல்வி சார்ந்தவற்றிற்க்கு புதன் ஓரையும் நன்மை தரும்.
தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் அல்லது அறிவன் அல்லது வியாழன் ஹோரைகள் சிறந்த பலனை தரும்.