ஞாயிறு மற்றும் செவ்வாய் இணைந்து வியாழனின் பார்வை பெற்றால், அத்தகைய ஜாதகக்காரர்கள், இந்திய ஆட்சிப்பணி போன்ற பொறுப்பான பதவிகளில் அமர்வர். இவர்கள், காவல்துறை, ராணுவம், பிறருக்கு அறிவுரை கூறி ஆட்சி செய்வது போன்ற பொறுப்பான தலைமைப் பதவிகள் கிடைக்கும்.
ஞாயிறு மற்றும் செவ்வாய் 10ல் அமையப் பெற்று, காரி (சனி) பலம் பெற்றிருந்தால், இத்தகைய ஜாதக அமைப்பு கொண்ட கடக லக்கினக்காரர்கள், அரசியலில் செல்வாக்குடன் திகழ்வர்.
ஞாயிறு மற்றும் செவ்வாய் உடன் இணைந்து, நிலவு அல்லது ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றால், மருத்துவத்துறையில் சிறப்பு திறன்கொண்ட மருத்துவராக விளங்கக்கூடிய அமைப்பு கிடைக்கும். பொதுவாக இவர்கள் அறுவை மருத்துவத்தில் சிறந்து விளங்குவர்.
ஞாயிறு, செவ்வாய் மற்றும் அறிவன் (புதன்) ஆகியவை சேர்க்கை பெற்றால், அத்தகைய அமைப்பு கொண்ட கடக லக்கினக்காரர்கள், கட்டிட பொறியாளர் அல்லது கணினி சார்ந்த துறைகளில் வல்லுநர்களாக விளங்குவர்.
செவ்வாய், அறிவனுடன் இணைந்து இருந்தால் அவர்கள் கணினி துறையில் பெரிய அளவிலான வருவாய் ஈட்டுவர்.
செவ்வாய், நிலவு, ராகு / கேது சேர்ந்து இருந்தால், அவர்கள் மருந்து, வேதியல், வேளாண்மை, உணவு போன்ற துறைகளில் மேலோங்கி இருப்பர். இத்தகைய அமைப்புடன், வியாழனின் பார்வையும் கிடைக்கப்பெற்றால், அவர்கள் துறை தலைமைப் பதவிகளை வகிப்பர்.
செவ்வாய் தனது நட்பு கோள்களான ஞாயிறு, நிலவு, வியாழன் போன்றவர்களுடன் சேர்க்கைப் பெற்று, வலுப்பெற்று இருந்தால், அவர்கள் செய்யும் தொழில் சிறந்தோங்கி இருக்கும். மேலும் அரசு உதவிகளையும் சலுகைகளையும் ஜாதகக்காரர்கள் சிறப்பாக பெறுவர்.
செவ்வாய், வியாழன், அறிவன் ஆகிய கோள்கள் சேர்க்கை பெற்று வலுவாக அமையப் பெற்றால் பலதுறைகளில் வல்லுநர்களாக திகழ்வர். குறிப்பாக இத்தகைய அமைப்பு பெற்றவர்கள் வங்கித்துறை, வெளிநாடு தொடர்புடைய தொழில், பணம் கொடுக்கல் வாங்கல், பங்குச் சந்தை, தரகு தொழில், பெருநிறுவனங்களின் முகவர் போன்றவற்றின் மூலம் பெரும் செல்வம் ஈட்டுவர்.
வியாழன் அறிவன் போன்றவர்கள் பத்தாம் வீட்டில் அமையப்பெற்றால், அந்த ஜாதகக்காரர், சிறந்த அறிவாளியாக, அறிவாற்றல் மிக்கவராக, பிறருக்கு அறிவுரை சொல்லிக் தரத்தக்க அளவிற்கான பதவிகளை ஏற்பார்.
வியாழன், அறிவன் மற்றும் காரியுடன் பலம் பெற்றால் அத்தகைய ஜாதக அமைப்பு கொண்டவர்கள் வழக்கறிஞர் அல்லது நீதித்துறையில் பணிபுரியக்கூடிய அமைப்பு கிடைக்கும்.
செவ்வாய் காரியுடன் இணைந்து அல்லது தொடர்பில் இருந்தால், கட்டிடங்கள் கட்டி விற்பது, நிலம் வாங்கி விற்பது, போன்ற கூட்டுத்தொழில் சிறப்பாக அமையும்.
செவ்வாய், வெள்ளியுடன் சேர்க்கை பெற்று அதனுடன் நிலவும் சேர்ந்து இருந்தால், அத்தகைய ஜாதக அமைப்பு கொண்டவர், கலை - இசை - திரை தொடர்பான துறைகளில் சிறந்த நிலையில், பெரிய அளவிலான செல்வம் ஈட்டும் அமைப்பு கிடைக்கும்.
செவ்வாய், வெள்ளியுடன் சேர்ந்து அவற்றுடன் அறிவன் அல்லது காரி, சேர்க்கை பெற்றால் தாமாக தொழில் செய்து செல்வந்தர்களாக வாழ்வர்.
செவ்வாய், காரி அல்லது ராகு கோளுடன் சேர்க்கை பெற்று, நல்ல கோள்களின் பார்வையும் இன்றி இருந்தால், அத்தகைய ஜாதக அமைப்பு கொண்டவர் சட்ட சிக்கல்களில் சிக்கிக்கொண்டு அல்லல்படுவர்.
பத்தாம் வீட்டில் காரி இருந்து, அதனுடன், ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றால், அந்த ஜாதகக்காரர், அடிமையான நிலையில் வாழ்வார்.
பொதுவாக கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கூட்டுத் தொழில் சிறப்பாக அமையும். குறிப்பாக இவர்கள் நிலம் கட்டிடம் தொடர்பான தொழிலில் ஈடுபட்டால், அவர்கள் சிறந்த நிலையில் வாழ்வர்.