ஆருடம் கணிப்பதற்கு பயன்படும் ஒன்பது கோள்களும் ஒவ்வொரு வகையான திறனை கொண்டிருக்கும் என நாம் ஏற்கனவே கற்றோம். அவற்றின் திறன் வெளிப்பாடுகள் அவை இருக்கும் ராசி வீடுகளை பொறுத்து மாறுபடும் என்பதையும் கற்றோம்.
இங்கு நாம் கோள்களின் திறன்கள் மற்றும் அவற்றின் தன்மைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
ஞாயிறு: ஆவருடத்தின் முதல் தலையான கோள் ஞாயிறு. ஞாயிறு எல்லாக் கோள்களுக்கும் மூலம் என ஆருடம் கணிக்கிறது. இதை தந்தைக்குரியவன், அதாவது உயிருக்கு ஈடானவன் என்று குறிப்பிடுகின்றனர். ஆகவே ஒரு ஜாதகரின் ஜாதகத்தில் ஞாயிறு பகை அல்லது பாழடைந்து (நீச்ச) இருக்கக்கூடாது. மேலும் லக்னத்திற்கு 2 அல்லது 7 அல்லது 8ம் வீடுகளில் இருப்பது வாழ்க்கைத்துணையின் அமைப்பிற்கு நன்மை அல்ல என்று ஆருடம் சொல்கிறது.
திங்கள்: ஞாயிறு தந்தைக்கு உரியவன் என்றால், திங்கள் தாய்கு உரியவர். ஞாயிறு உயிர் என்றால் திங்கள் உடல். திங்கள், சிந்திக்கும் ஆற்றல், அறிவு, எண்ணம் போன்றவற்றை ஆளும் கோள் என ஆருடம் கணிக்கிறது. திங்கள், லக்னத்திற்கு 6 - 8 - 12 இருப்பது நன்மைக்குரிய அமைப்பாக கருதப்படுவது இல்லை.
செவ்வாய்: உடன்பிறப்பு, நிலம், வீடு ஆகியவற்றை ஜாதகருக்கு தருவது செவ்வாய். ஆகவே பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் பகை வீட்டிலோ அல்லது பாழ்படும் வீட்டிலோ அல்லது 2 - 7 - 8 - 12 ஆகிய வீடுகளில் இருக்கக்கூடாது.
அறிவன் (புத): அறிவன் கல்விக்கு உரிமையாளர். வாழ்க்கைத் துணையின் பெற்றோரின் நலன்களைக் காப்பவன். அறிவன் பகை வீட்டிலோ அல்லது பாழ்படும் வீட்டிலோ அல்லது 3 - 6 - 8 - 12 ஆகிய வீடுகளில் இருந்தால் அவை நன்மை தரும் அமைப்பாக கருதப்படுவது இல்லை. அறிவன் 8ம் வீட்டில் ஞாயிறுடன் சேர்ந்து இருந்தால் அறிவாற்றலையும் நல்ல கல்வியையும் தரும் என்கிறது ஆருட கணிப்புகள்.
வியாழன்: வியாழனை வடமொழியில் "குரு" என்றழைக்கின்றனர். சிலர் வியாழனை "பொன்னவன்" என்று குறிப்பிடுவதும் உண்டு. குழந்தைப்பேறு, பொன், பொருள், ஆகியவை வேண்டுமெனில் இந்த வியாழனின் அருள் வேண்டும் என்கிறது ஆருடம். இந்த வியாழனுக்கு 6 - 8- 12ல் திங்கள் இருந்தால், அல்லது லக்னத்திற்கு 6 - 8- 12ல் வியாழன் இருந்தால் வியாழன் தரும் நற்பயன்கள் குறைந்து அல்லது முற்றிலுமாக இல்லாமல் போகும். வியாழன் மூளை தொடர்பான அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாக இருக்கிறது.
வெள்ளி: ஒருநாள் துவங்குவதற்கான அறிகுறியாக விளங்குவது வெள்ளி. வெள்ளி முளைத்து நாள் துவங்கும். வெள்ளியை வடமொழியில் "சுக்கிர" என்று அழைக்கிறார்கள். வெள்ளி, ஜாதகரின் பாலியல் தூண்டல்களுக்கு அடிப்படையானது கருதப்படுகிறது. ஆடு, மாடு, வண்டிகள் போன்றவற்றை ஜாதகர் பெறுவதற்கு இந்த வெள்ளி அடிப்படையாக அமைகிறது. வெள்ளி 3 - 6 - 8 ஆகிய வீடுகளில் இருப்பது ஜாதகருக்கு நல்லதல்ல. மேலும் அது பகை அல்லது பாழ்பட்டு இருப்பதும் நற்பயன் தருவதற்கு அல்ல.
காரி (சனி): ஒரு ஜாதகரின் வாழ்நாளை அளவிடுவது இந்த சனி என்கிற காரி. காரி என்றால் கரிய நிறம் என பொருள்படுகிறது. காரியை பொருத்தவரை 2 - 4 - 5 - 7 - 9 ஆகிய வீடுகளில் இருப்பது ஜாதகருக்கு தீங்கான பலனைத்தரும்.
ராகு: இதை நிலையற்ற கோள் என்றும், பாம்பின் தலையாகவும் ராகு என்கிற இந்த ஆருடத்தில் மட்டும் பயன்படும் கோளை ஆருடம் கருதுகிறது. இத்தகைய அமைப்பை கொடுத்திருந்தாலும், ராகு, மகிழ்வான வாழ்வு வாழ பொருள் சேர்க்கைக்கான அடிப்படையாகத் திகழ்கிறது. திங்களுக்கு முன் அல்லது பின்னாக 1, 2, 4, 5, 7, 8 ஆகிய வீடுகளில் இந்த ராகு இருந்தால் ஜாதகருக்கு நற்பயன்கள் கிடைக்காமல் போகும்.
கேது: ராகுவைப் போலவே கேதுவும் நிலையற்ற கோள் என்றும், அது பாம்பின் உடலாகவும் ஆருடம் கருதுகிறது. ஞானம், ஆன்மீகம், மறுபிறப்பு இல்லாத உயர் பிறப்பை குறிப்பிடும் உயர்வான நிலையை ஆருடம் இந்த கேதுவிற்கு கொடுத்துள்ளது. கேது 12ம் வீட்டில் இருக்கும் நிலையில், பகை அல்லது பாழ்பட்ட நிலை இல்லாது இருப்பின், ஜாதகருக்கு இப்பிறப்பு மனிதனாக பிறப்பது கடைசி பிறப்பு என்றும் அதன்பின் அவர் கடவுள் நிலையை அடைவார் என்றும் ஆரூடம் கணிக்கிறது. கேது 1, 2, 4, 5, 7, 8 ஆகிய வீடுகளில் இருப்பது நற்பயன் தருவதற்கு அல்ல.