மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தும் விதமாக, குரு பெயர்ச்சி பலன்கள் மற்றும் காரி (சனி) பெயர்ச்சி பலன்கள் கடந்த சுமார் 40-45 ஆண்டுகளாக தொடர்ந்து புத்தக வடிவிலும், இன்றைய தொழில்நுட்ப ஊழியில், நிகழ்நிலை தளங்களிலும் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த இரு கோள்களின் பெயர்ச்சி பலன்கள் குறித்து எழுதுவதற்கு என்று, மக்களின் மனநிலை நன்கறிந்த பல ஜோதிடர்கள் உள்ளனர். மக்களின் மன ஓட்டத்திற்கு இணங்க அவர்கள் இந்த கோள்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து தங்களது எழுதும் திறனை வெளிப்படுத்துகின்றனர்.
இப்போது திடீரென, ராகு கேது பெயர்ச்சி பலன் என்று கட்டுரை எழுதுவதற்கும் பலர் முனைந்துள்ளனர். இந்த கட்டுரைகளை எல்லாம் காசு கொடுத்து படிப்பதற்கு என்று ஒரு கூட்டமும் உள்ளது.
கோள்களின் பெயர்ச்சி குறித்தான ஜாதக பயன்களை அறிந்து கொள்வதற்கு முன்பு, ஒவ்வொரு கோளும் ஒரு ராசியில் எவ்வளவு நாள் பயணிக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
கோள்கள் பயணிக்கும் ஊழி அளவு:
ஞாயிறு ஒவ்வொரு ராசியிலும் ஒரு திங்கள் (30 நாட்கள்) அளவிற்கு பயணிக்கும்.
திங்கள் (நிலவு) ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை நாட்கள் மட்டுமே பயணிக்கும்.
செவ்வாய் ஒன்றரை திங்கள் (45 நாட்கள்) பயணிக்கும்.
அறிவன் ஒவ்வொரு ராசியிலும் ஒரு திங்கள் (30 நாட்கள்) பயணிக்கும்.
காரி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் பயணிக்கும்.
ராகு மற்றும் கேது ஆகிய கோள்கள் ஒன்றரை ஆண்டுகள் பயணிக்கும்.
வியாழன் சுமார் ஓராண்டு பயணிக்கும். சில ஆண்டுகளில் வியாழன் தம் இருப்பிடத்தை இரண்டு அல்லது மூன்று முறை மாற்றி அமைக்கும்.
வெள்ளி ஒவ்வொரு ராசியிலும் ஒரு திங்கள் (30 நாட்கள்) அளவிற்கு பயணிக்கும்.
மேற்சொன்ன கணக்கில் இருந்து, ஒன்றை நாம் நன்கு புரிந்து கொள்ளலாம். கட்டுரை எழுதுபவர்கள், ராசியில் நீண்ட நாள் பயணிக்கும் கோள்கள் குறித்து மட்டுமே எழுதுகின்றனர். அவற்றிற்கு ஊடகங்களும் சிறப்பு நிலை கொடுத்து விளம்பரப் படுத்துகின்றன. அதனால் அவற்றின் விற்பனை அல்லது பார்வை பெருகுகிறது. அதனால் அவர்களின் வருவாய் சிறப்பாக அமைகிறது.
கோள்கள் அவற்றின் இருப்பிடத்தை பொறுத்து நமக்கு பயன் தருகின்றன என எடுத்துக் கொண்டால், ஆருடத்தில் மொத்தம் 7 + 2 கோள்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றின் பெயர்ச்சியை பொருத்தும், இருக்கும் இடத்தை பொறுத்தும் நமக்கான பலன்கள் ஆருட கணிப்புகளின் படி மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
சனி இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் இருக்கிறது என்றால், அதே இரண்டரை ஆண்டு ஊழி அளவில் பிறகோள்கள் அந்த ராசியில் தங்கிச் செல்கின்றன. அப்படியானால் சனி என்கிற ஒரு கோளின் தன்மையை மாற்றி அமைக்க ஆருட விதிகளின்படி சுமார் 8 கோள்கள் செயல்படுகிறது.
அதன்படி பார்த்தால், ஒரு கோளின் பெயர்ச்சியை வைத்து ஒரு ஜாதகருக்கு பொத்தாம் பொதுவாக பலன் சொல்ல இயலாது.
மேலும், அவரது ஜாதக அடிப்படையில், அவருக்கு நிகழும் தசா புக்தி ஊழிகளையும் கணக்கில் எடுக்க வேண்டும்.
வியாழன் பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என கட்டுரைகளை படித்து மனதை குழப்பிக் கொள்ளாமல், ஜாதகர்கள் தத்தம் வேலைகளை செய்து வந்தாலே வாழ்க்கை சிறக்கும் என்பதே உண்மை.
"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் (௬௱௰௯ - 619)" எனும் வள்ளுவனின் வாக்குக்கிணங்க, உழைப்பே உயர்வு என்கிற மன திடத்துடன், வாழ்க்கையை தொடர்ந்து முன்னேற்றி செல்வோம்.