ADVERTISEMENT

ஜோதிடம் என்கிற ஆருடம் உண்மையா அல்லது பொய்யா?

ஜோதிடம் என்கிற ஆருடம் உண்மையா அல்லது பொய்யா? ஜோதிடம் என்கிற ஆருடம் உண்மையா அல்லது பொய்யா?

எல்லா மதத்தினரும், இனத்தினரும், மொழியினரும் என எல்லோரும் ஜோதிடத்தை ஓரளவிற்கேனும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று உறுதியிட்டுச் சொல்லலாம்.

"ஏற்றுக் கொள்கிறார்கள்" என்று சொன்னவுடனே நம் மனதில் தோன்றுவது, ஜோதிடம் என்கிற ஆருடம் உண்மை தன்மை கொண்டதா? என்கிற கேள்வி!

எந்த அளவிற்கு இந்த ஆருடம் கூறுவதில் நம்பகத்தன்மை உள்ளது?  எல்லா பொருத்தமும் பார்த்து திருமணம் முடிக்கிறார்கள்... அது முறிந்துவிடுகிறது... சிலர் எதுவுமே பார்ப்பதில்லை... திருமணம் நீடிக்கிறது... இது எதனால்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தேடுவதற்கு முன்பு, ஆருடம் முழுக்க முழுக்க ஒரு கணித கோட்பாட்டின் அடிப்படையில்   கணிக்கப்படுகிறது என்கிற உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.  

கோள்களின் இருப்பிடம் துல்லியமாக கணக்கிடப்பட்டு, ஒவ்வொரு கோளின் இருப்பிடத்திற்கும் ஒவ்வொரு பலன் என கணித்து, அதன் மூலம் ஒருவரின் வாழ்வை கணித்துக் கூறுவதே ஆருடம்.

கணித சமன்பாடு பயன்படுத்தியே ஆருடம் கணிக்கப்படுகிறது.  அதனால்தான் கணினி மென்பொருள் கொண்டு பிறப்பு ஜாதகம் முதல் ஆருட பலன்கள் வரை கணிக்க இயல்கிறது.

கணிதம் அறிவியலுக்கு எல்லாம் அடிப்படை.  அப்படியானால் ஆருடம் ஒருவகையில் அறிவியலுக்கு உட்பட்டே கணிக்கப்படுகிறது.

கணிதத்தின் அடிப்படையில் என்றால் ஆருடம் ஏன் பலவேளைகளில் பொய்த்துப் போகிறது?

பெரும்பாலான நேரங்களில் புகழ்பெற்ற ஆருட கணிப்பாளர்களால் கணிக்கப்பட்ட ஆருடம் கூட பொய்த்துப் போகிறது. ஏன்? எதனால்? எங்கே பிழை? என்பதை யாராலும் அறியாத நிலை ஏற்படுகிறது.

பலநூறு அறிவியலாளர்கள், பல நூறு மணி நேரங்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், அதன் அடிப்படையிலான கணிப்புகள், நூறாயிரம் கணக்கில் பல முன் அனுபவ தகவல் திரட்டுகள், என எல்லாவற்றையும் பயன்படுத்தியும், விண்வெளியில் செலுத்தப்படும் விண்கலம் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிவுறுகிறது. ஏன் விண்வெளியில் ஏவப்படும் விண்கலன் ஏவுதல் பல நேரங்களில் தோல்வி அடைவதை காண்கிறோம்?

முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்து செயல்படும் இத்தகைய மனித முன்னெடுப்பு கணிப்புகள் ஏன் தோல்வியில் முடிகிறது?  இவற்றிற்கான விடையை யாரும் அறியாத வகையில் இயற்கை அமைத்துள்ளது!  அதை இயற்கையின் செயல்பாடு அல்லது இறையின் செயல்பாடு என கொள்ளலாம்!  ஏனெனில் அதை தாண்டி சிந்தித்து பிழையை கண்டறிய மனித மூளையால் இயலுவதில்லை.

இவற்றுக்கான விடையை தெரிந்து விட்டால் மனிதன் கடவுளாகி விட மாட்டானா? அல்லது இயற்கையின் திறனுக்கு எல்லாம் அப்பாற்பட்ட திறமை கொண்டவனாக மனிதன் வடிவெடுத்து விடமாட்டானா? இயற்கை என்கிற இறை, மனித கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதை அவ்வப்போது மனித இனத்திற்கு எடுத்துச் சொல்லி வருகிறது.  இதுவே ஆருடத்திற்கும் பொருந்தும்.

இறையின் முடிவே முடிவு என்றால் ஆருடம் எதற்கு?

மனித இனத்திற்கு பல ஊழிகளாக ஆருடம் கணித்து பலன் சொல்வதால் நன்மை ஏற்பட்டு வருகிறது.  ஆருடம் மன திடம் தருகிறது.  மனித இனம் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வழி வகை செய்கிறது.

ஒரு ராசிக்காரர் தாம் மேற்கொண்ட தொழிலில் தோல்வியை தழுவி விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.  அந்த தோல்விக்கான முழு பொறுப்பும் அவருக்கானதே என்று தீர்ப்பு சொல்வது எளிதிலும் எளிது.

இவ்வாறான தீர்ப்பு, முயற்சி மேற்கொண்ட அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது அவர் பிற முயற்சிகளை மேற்கொள்ள விடாமல் முடக்கி விட வாய்ப்புள்ளது.

இவ்வாறு பழியை அவர் மீது போடுவதற்கு பதிலாக, ஞாயிறு, இராகு, கேது, வியாளன் அல்லது செவ்வாய் கோளின் இருப்பிடம் ராசி அமைப்பில் சரியில்லாததால் தொழிலில் முடக்கம் ஏற்பட்டது என்று எடுத்துச் சொல்வோமேயானால், அவரின் மனம், தன்னால் தோல்வி என்பதைத் தாண்டி புதிய முயற்சிகளை மேற்கொள்ள அவரை ஊக்குவிக்கும்.

ஒழுக்கக்கேடாக பிறர்மனை தேடி ஒருவர் சென்றுவிட்டார் என வைத்துக் கொள்வோம்.  அந்த நபர் அந்த இழிவான செயலை தானாக செய்தார் என்று சொன்னால், குடும்பம் பிளவுபடும்.  அதற்கு பதில், வெள்ளி மற்றும் செவ்வாய் கோள்களின் இருப்பிடம் ராசி அமைப்பில் சரியில்லாததால் அவர் அத்தகைய கேடுகெட்ட இழிச் செயலை மேற்கொண்டார் என்று சொல்வது, அந்த கோளின் மீது பழி விழுவதால் குடும்பம் பிளவுபடுவதை தடுக்கும். அவர் மனம் திருந்தி தன் குடும்பத்துடன் மீண்டு வாழ வழி ஏற்படும்.

வாழ்வு சிறக்கும் அல்லது நல்ல நாள் இன்று முதல் பிறக்கிறது என்று ஒருவர் சொல்லக் கேட்டாலே ஒருவரின் மனம் குதூகளித்து மகிழும்.  அது, அந்த நபரை முயற்சிகள் பல செய்ய வழிவகுக்கும்.

நடைபயிலும் குழந்தை ஒன்று கால் இடறி தரையில் விழுவதை கண்டால் பெரியவர்கள் தரையை நாலு அடி அடிப்பார்கள்... "தரையே ஏன் என் குழந்தையை தள்ளி விட்டாய்?" என உரக்க கேட்டு அடிப்பார்கள். அப்படி அடிக்கும் பொழுதே, குழந்தைக்கும், நிதானமாக கவனித்து செல்ல வேண்டும் என்கிற அறிவுரையை குழந்தையின் ஆழ்மனதிற்குள் புகுத்துவார்கள்.

பெரியவர்களுக்கு நன்கு தெரியும், குழந்தை தன் தவறால் இடறி விழுந்தது என்பது.  இருப்பினும் ஏன் தரையை அடிக்க வேண்டும்?

குழந்தையின் தவறை சுட்டிக் காட்டுவதை காட்டிலும், தரையின் மீது பழி போடுவதால் குழந்தை மீண்டும் தன்னம்பிக்கையுடன் எழுந்து நடைபயில உதவுகிறது. அதே வேளையில் கவனித்து செயல்பட வேண்டும் என்கிற அறிவுரையும் கொடுக்கப்படுகிறது.  இது, தேனில் கலந்து மருந்து கொடுப்பதற்கு இணையாகும்.

இதே போன்றதுதான் ஆருடமும்.  ஆருட கணிப்புகள் கணிதத்தின் அடிப்படை என்றாலும், இயற்கையின் இறை முடிவுகளை எவராலும் மாற்றி அமைக்க இயலாது.  இருப்பினும் பல நேரங்களில் நமக்கு மன திடம் தருவது ஆருடம்.

இவற்றையெல்லாம் கடந்து, ஆருடம் கணிப்பவர் ஒரு ஆலோசகராகவும் திகழ்கிறார் என்பதுதான் அடிப்படை உண்மை.  ஒரு செயலை ஒருவரே முடிவெடுத்து அதை நடைமுறைப்படுத்துவதைக் காட்டிலும், வேறு ஒருவரிடம் கருத்தைக் கேட்டு செயல்படுவது சிறப்பு தானே?  அத்தகைய வழிகாட்டியாகத்தான் பல ஆருடம் கணிப்பவர்கள் செயல்படுகிறார்கள்.

ஆருட கணிப்புகள் தோல்வி அடைகின்றன என்று அதை ஒதுக்கி வைப்பதைக் காட்டிலும், அதனால் ஏற்படும் பலன்கள் பெருமளவு உள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading