ராசி வீடுகள் மொத்தம் 12 விண்மீன்களை பொறுத்தவரை அவற்றுக்கு மொத்தம் 108 பாதங்கள் உள்ளன. ஒவ்வொரு ராசி வீட்டிற்கும் விண்மீன் 9 பாதங்கள் வீதம் ஏற்படுகிறது. இவ்வாறு ராசி வீட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ள விண்மீன்களின் 9 பாதங்களில், ஒரு பாதம் வர்க்கோத்தமம் ஏற்படுத்துகிறது.
ராசிக்கட்டத்தில் ஒரு கோள், ஒரு குறிப்பிட்ட விண்மீன் பாதத்தில் இடம்பெற்று, ஒரு குறிப்பிட்ட ராசி வீட்டில் நிற்கிறது என்று எடுத்துக்கொண்டால், அந்த கோள் நவாம்ச கட்டத்திலும், அதே ராசி வீட்டில் இடம் பெற்று இருந்தால், அந்த அமைப்பை தான் வர்க்கோத்தமம் என்று அழைக்கிறோம். எளிதாகச் சொல்வதானால், ஒரு கோள் ராசிக்கட்டத்திலும், நவாம்சக் கட்டத்திலும் ஒரே இடத்தில் இருப்பதை வர்கோத்தமம் என்று அழைக்கிறோம்.
மேலே சொன்னதன்படி, 12 ராசி வீடுகளுக்கும் வர்க்கோத்தமம் பெறக்கூடிய விண்மீன் பாதங்கள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.
https://horoscope.hosuronline.com/learn-astrology-details.php?nid=490
சர, ஸ்திர, உபய ராசிகள் குறித்து, இந்த இணைப்பைப் பின் தொடர்வதன் மூலம், அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
வர்க்கோத்தமம் பெறக்கூடிய விண்மீன் பாதங்கள், சரராசி வீடுகளில் முதல் பாதத்திலும், ஸ்திர ராசி வீடுகளில் ஐந்தாம் பாதத்திலும், உபய ராசி வீடுகளில் 9-ஆம் பாதத்திலும் இடம்பெற்றுள்ளன.
வர்கோத்தமம் விண்மீன் - பாதம் - ராசி வீடுகள் பட்டியலில் காணலாம்:
1. மேஷ ராசியில் அஸ்வினி 1ஆம் பாதம் கேது சாரம்.
2. ரிஷப ராசியில் ரோகிணி இரண்டாம் பாதம் திங்கள் சாரம்.
3. மிதுன ராசியில் புனர்பூசம் 3ஆம் பாதம் வியாழன் சாரம்.
4. கடக ராசியில் புனர்பூசம் 4ஆம் பாதம் வியாழன் சாரம்.
5. சிம்ம ராசியில் பூரம் 1ஆம் பாதம் வெள்ளி சாரம்.
6. கன்னி ராசியில் சித்திரை 2ம் பாதம் செவ்வாய் சாரம்.
7. துலாம் ராசியில் சித்திரை 3-ஆம் பாதம் செவ்வாய் சாரம்.
8. விருச்சிகம் ராசியில் அனுஷம் 4 ம் பாதம் காரி (சனி) சாரம்.
9. தனுசு ராசியில் உத்திராடம் 1ஆம் பாதம் ஞாயிறு சாரம்.
10. மகரம் ராசியில் உத்திராடம் 2ஆம் பாதம் ஞாயிறு சாரம்.
11. கும்பம் ராசியில் சதயம் மூன்றாம் பாதம் ராகு சாரம்.
12. மீனம் ராசியில் ரேவதி நான்காம் பாதம் அறிவன் (புதன்) சாரம்.
வர்கோத்தமம் பெற்ற கோளின் தசை புக்தி ஊழிகளில் ஜாதகருக்கு மிகவும் யோகமான நற்பயன்களை தரும்.
4 - 9 - 10 ஆகிய வீடுகளில், அவற்றின் அதிபதி வர்கோத்தமம் பெற்றால், நல்ல யோகமான பலன்களை ஜாதகருக்கு கண்டிப்பாக வழங்கும் என்கிறது ஆருட நூல்கள்.
லக்னத்துக்கு சுபராக நட்பு அல்லது ஆட்சி அல்லது உச்சம் பெற்று வர்கோத்தமம் பெற்றால், இத்தகைய வர்கோத்தமம் முழு வலுவை பெற்றது என்பது பொருள். இத்தகைய அமைப்பு ஜாதகருக்கு மிகவும் யோகமான பலன்களையே தரும்.
ஏழாம் வீட்டு அதிபதி - ராசி வர்கோத்தமம் பெற்றிருந்தால், வாழ்க்கைத் துணை அழகான முகம் மற்றும் உடல் அமைப்புடன் அமைய பெறுவார்..
ஞாயிறு வர்கோத்தமம் அடைந்திருந்தால், உயர்ந்த பதவி அல்லது வளமான தொழில் அமையும்.
லக்கினம் வர்கோத்தமம் அடைந்திருந்தால், நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு
ஞாயிறு வர்கோத்தமம் அடைந்திருந்தால், குடியரசுத் தலைவர் , முதன்மை அமைச்சர், அமைச்சர், நகர் அல்லது ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் அரசியலில் பெரும் பதவி
திங்கள் வர்கோத்தமம் அடைந்திருந்தால், திடமான மன வலிமை, கதை - கவிதை எழுதும் கலை ஆற்றல், நல்ல கற்பனை திறன்.
செவ்வாய் வர்கோத்தமம் அடைந்திருந்தால், படைத்தலைவர், காவல் துறையில் உயர் பதவி , துணிச்சலான மனநிலை, எடுத்த செயல்களை தடைகளை மீறி நிறைவேற்றுதல்
அறிவன் (புதன்) வர்கோத்தமம் அடைந்திருந்தால், பேச்சற்றல், சிந்தித்து செயல்படும் திறமை, ஆராய்ச்சி திறன் , உயர் கல்வி.
வியாழன் வர்கோத்தமம் அடைந்திருந்தால், ஆன்மீக ஈடுபாடு
வெள்ளி வர்கோத்தமம் அடைந்திருந்தால், கலைத்துறையில் ஈடுபாடு , கவர்ச்சியான முகம் மற்றும் உடல் அமைப்பு, நகை தொழில்
காரி (சனி) வர்கோத்தமம் அடைந்திருந்தால், தலைமை தாங்கும் திறன், தொழிலதிபர்.
ராகு வர்கோத்தமம் அடைந்திருந்தால், துணிச்சல், நல்லூழ், தொழிலதிபர்
கேது வர்கோத்தமம் அடைந்திருந்தால், இறையருள், ஞானம், பின் நடப்பதை முன் கணிப்பதில் வல்லவர்.